You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யேமன் போர்: சௌதி தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பேர் பலி மற்றும் பிற செய்திகள்
சௌதி தலைமையிலான கூட்டணி யேமனிலுள்ள ஒரு தடுப்புக்காவல் நிலையத்தை குறிவைத்து நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு (ஐ.சி.ஆர்.சி) தெரிவித்துள்ளது.
யேமனின் தாமர் நகரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தின் போது, ஆறு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
யேமன் அரசுப்படைக்கு ஆதரவாக செயல்படும் சௌதி தலைமையிலான அணி, தாங்கள் நடத்திய தாக்குதலில், ஒரு ட்ரோன் மற்றும் ஏவுகணை தளம் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வான்வழித் தாக்குதலில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக சௌதி தலைமையிலான அணியை எதிர்த்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
யேமனில் உள்ள ஐ.சி.ஆர்.சியின் தூதுக்குழுவின் தலைவரான ஃபிரான்ஸ் ரசன்ஸ்டைன், தங்களது அமைப்பு நிகழ்விடத்திலிருந்து உடல்களை அப்புறப்படுத்தி வருவதாகவும், இதன் பிறகு தப்பிப்பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜனின் அரசியல் பயணம்
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்ட, தமிழிசை செளந்தரராஜன் தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1961- ஆம் ஆண்டு நாகர்கோவிலில், ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை.
சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், பின்னர் தனது மருத்துவ மேற்படிப்பை முடித்தார். இவரது கணவர் சௌந்தரராஜனும் ஒரு மருத்துவர்.
21-ஆம் நூற்றாண்டிலும் மாறாத தலித்துகளின் வாழ்க்கை
அது மே மாதம். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தொராஜி என்ற பகுதியில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் 11 தலித் மணமகன்கள் கலந்து கொண்டனர்.
திருமண ஊர்வலங்களில் குதிரை மீது உயர் சாதியை சேர்ந்த மணமகன்களே அமர வேண்டும் என்ற பழைய பாரம்பரியத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்த்தனர். இதனால், அப்பகுதியில் சாதி மோதல் ஏற்படலாம் என்ற பதற்றத்தால், அந்த ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது.
பல ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் செய்து வைக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த யோகெஷ் பாஷா பிபிசியிடம் கூறுகையில், தலித் சமூகத்தினர் இனியும் பாகுபாடை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றே இது நடத்தப்பட்டதாக கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி: பௌத்தர்கள் நிறைந்த லடாக்கில் பாஜகவளர்ந்தது எப்படி?
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் லடாக்கில் பாரதிய ஜனதா கட்சி பெருமளவு வளர்ந்துள்ளது.
லேவில் உள்ள ஒரு பழைய பாஜக அலுவலகம், அங்கு இருபது தொண்டர்கள் வந்தால், உட்காருவதற்கு கூட சரியான இருக்கை ஏற்பாடு இல்லை.
இரண்டு அல்லது மூன்று உடைந்த நாற்காலிகள், ஒரு பழங்கால சோபா மற்றும் பிளாஸ்மா டி.வி ஆகியவை இருக்கின்றன.
"பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்"
"நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
இதைவிட அதிகமான வேகத்தில் வளர்ச்சியடையும் திறன் இந்தியாவுக்கு இருக்கும் நிலையில், அனைத்து நிலைகளிலும் தவறான நிர்வாகத்தை வெளிப்படுத்தும் மோதி அரசாங்கமே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு காரணம்" என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்