You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடவுளுக்கு நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறார்களின் பிணக்குவியல் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள்
பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன.
இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் ஈரமான வானிலையின் போது கொல்லப்பட்டு, கடலை நோக்கி புதைக்கப்பட்டுள்ளதால், கடவுள்களை திருப்திப்படுத்த அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்?
இந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் அரசுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்பு இப்படி நடந்துள்ளதா?
ஆண்டுதோறும் அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியளிக்கிறது. முதலீடுகள், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு வழக்கமாக ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதி இருக்கும்.
தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, கூடுதல் நிதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும். ஆனால் கடந்த ஆண்டு அரசுக்கு அளித்ததைவிட, இப்போது இரு மடங்கிற்கும் அதிகமான தொகை அளிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் பேசிய ஒரு வார்த்தையால் சர்ச்சை
மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
'பறையா' என்பதே மகாதீர் பயன்படுத்திய வார்த்தை.
இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பறையர் என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.
திருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை?
திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு 'விம்பம்' என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது.
ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார்
லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் மீது காவல்துறை பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாரை தெலங்கானா காவல்துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரிக்க வேண்டுமென பரிந்துரைத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்