விண்வெளியில் நிகழ்ந்த குற்றம் குறித்து விசாரிக்கும் நாசா மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக விண்வெளி வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டின் மீது நாசா விசாரித்து வருகிறது.
விண்ணில் இருந்து வங்கி கணக்கை இயக்கியதாக ஒப்புக்கொண்ட ஏன் மெக்லைன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். தம் முன்னாள் இணையர் மற்றும் அவரது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று தான் பரிசோதனை மட்டுமே செய்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒரு பாலின இணையனரான ஏன் மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப் படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2018ல் விவாகரத்துக்கு விண்ணப்பத்தினர்.
சம்மர் வொர்டன் தனது வங்கிக் கணக்கை, மெக்லைன் இயக்கியதாக மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே ஏன் மெக்லைன் பூமிக்கு திரும்பிவிட்டார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. விண்வெளி வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருத்தும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக விண்ணில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் குற்றம் செய்தால், அவர் கனடா நாட்டு சட்ட விதிகளின்படி விசாரிக்கப்படுவார். ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் என்றால், ரஷ்யா நாட்டின் சட்ட விதிகள் பின்பற்றப்படும்.

"ஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை"

பட மூலாதாரம், BEHROUZ MEHRI/AFP/GETTY IMAGES
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்குச் சென்றனர்.
இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராயச் சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லி: 'வாஜ்பேயி, அத்வானியுடன் சிறையில் தொடங்கிய அரசியல் பயணம்'

பட மூலாதாரம், Getty Images
1975 ஜூன் 25 டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அப்போதைய தலைவரான அருண் ஜெட்லி டெல்லி, நாராயணா பகுதியில் தன் இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
வெளியில் சப்தம் கேட்டு அவர் எழுந்தார். வெளியே காவல் துறையினர் சிலருடன் அவருடைய அப்பா வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கைது செய்வதற்காக காவல் துறையினர் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும், வீட்டின் பின்வாசல் வழியாக அருண் ஜெட்லி தப்பிச் சென்றுவிட்டார். அதே பகுதியில் நண்பரின் வீட்டில் அன்றைய இரவை அவர் கழித்தார்.
மறுநாள் காலை சுமார் 10.30 மணிக்கு, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களை, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துக்கு எதிரே திரட்டினார்.

தீவிர பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்கு அதிக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஐந்து நபர்கள் என மொத்தம் ஆறு பேர் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் லக்ஷர் இ தய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறையிலிருந்து தமிழகக் காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகக் கோவை மற்றும் சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












