குழந்தை கடத்தல் வதந்தியால் வங்கதேசத்தில் கும்பல் கொலை செய்யப்பட்ட 8 பேர் மற்றும் பிற செய்திகள்

வங்கதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய புரளியை அடுத்து நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல் சம்பவங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரர்கள் என்று தங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தென்பட்ட எட்டு பேரை மக்கள் கும்பலாக அடித்து கொன்றனர்.

ஆனால், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உண்மையில் குழந்தை கடத்தல்காரர்கள் கிடையாது என்பதை அந்நாட்டு காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த வதந்தி தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு

சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னைத் துன்புறுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, தீனதயாளன் என்பவருடன் தன்னையும் இணைத்து கைதுசெய்து பொன். மாணிக்கவேல் துன்புறுத்துவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதர் பாஷா என்பவர் தமிழக உள்துறை செயலரிடமும் தலைமைச் செயலரிடமும் மனு அளித்திருந்தார்.

கறுப்பு ஜூலை - 1983-இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகளை நோக்கலாம்.

கா்நாடக அரசியல்: காங்கிரஸ் அரசு வீழ என்ன காரணம்?

கர்நாடகத்தில் நடந்திருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கே ஒரு மதச்சார்புள்ள அரசு அங்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் - ஜனதா தளம் கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

மதச்சார்பற்ற சக்திகள் வலுவாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்த இரு கட்சிகளும் இணைந்து ஒரு அரசை அமைத்தன. பெரும்பான்மையை நிரூபித்துத்தான் இந்த அரசு அமைக்கப்பட்டது.

நிலவில் நிலம் வாங்கி அங்கு பிக்னிக் செல்ல காத்திருக்கும் ஐதராபாத் தொழிலதிபர்

சந்திரயான்-2 பயணத்தைத் தொடங்கியதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய நிலைக்கு இந்தியா சென்றுவிட்ட நிலையில், நிலவில் தனக்கு சிறிது நிலம் சொந்தமாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐதராபாத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் பாக்டி.

நிலவில் தன்னுடைய நிலத்துக்கு 2003 ஆம் ஆண்டில் ராஜீவ் பதிவு செய்துள்ளார். 140 அமெரிக்க டாலர்களுக்கு அதை அவர் வாங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :