போர்ச்சுகலில் பரவும் காட்டுத்தீ: நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்டு தீயணைக்கும் முயற்சி

போர்ச்சுகல் காட்டுத்தீ

மத்திய போர்ச்சுகலில் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தீயணைப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போர்ச்சுகலின் மத்திய பகுதியில் உள்ள காஸ்டெலோ பிரான்கோ என்று அழைக்கப்படும் அந்த மலை பிராந்தியத்தில் மூன்று இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களும், விமானங்களும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தீயில் பொது மக்களில் ஒருவருக்கும், குறைந்தது ஏழு தீயணைப்பு வீரர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஞாயிறன்று இரண்டு இடங்களில் தீ கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ

பட மூலாதாரம், Getty Images

இந்த காட்டுத்தீ சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளது. மேலும் பலத்த காற்றால் தீ மேலும் பரவியிருக்கிறது. "ஒரு கடினமான தினத்திற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்" என சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தீயணைப்பு பணியில் நான்கு புல்டவுசர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதில் காயமடைந்தவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காஸ்டெலோ பிரான்கோ பகுதியில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போர்ச்சுகல்லின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் ஆறு இடங்களில் அதிகபட்சமாக தீ ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.

காட்டுத்தீ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்

போர்ச்சுகலில் காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பொதுவாகவே சற்று வெப்பமான நாடுதான் போர்ச்சுகல். மேலும் அதிகபடியான காடுகளும் அங்கு உள்ளன. அட்லாண்டிக் பகுதியில் இருந்து அதிகபடியான காற்றும் அங்கு வீசக்கூடும்.

காட்டுத்தீ

பட மூலாதாரம், Getty Images

2017ஆம் நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :