“ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்”- குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பிற செய்திகள்

'ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம்'

ஃபேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தை உண்மை தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து உள்ளார்கள். ஃபேஸ்புக் லிப்ரா எனும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க செனட் வங்கி குழு ஃபேஸ்புக் நிர்வாகியான டேவிட் மார்கஸை விசாரித்தது.

"தவறுகளுக்கு மேல் தவறுகளை ஃபேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது. எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற நிறுவனம் அல்ல ஃபேஸ்புக்" என்று செனட்டர் செரோட் ப்ரவுன் கூறி உள்ளார். முதலில் ஃபேஸ்புக் தங்கள் பிழைகளை சரி செய்துவிட்டு புதிய தொழிலில் இறங்கட்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

பாகிஸ்தானில் தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் சாபா, மார்வா

தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள்.55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது.எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

நீலகிரியில் இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு கண்டுபிடிப்பு

நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன. குறிப்பாக வரையாடுகள், கடமான்கள் போன்ற உயிரினங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இரை விலங்குகள் இருப்பதால் புலிகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது.

பருவமழை வெள்ளம் - நேபாளம், இந்திய மக்கள் உறவில் எப்படியான தாக்கத்தை உண்டாக்குகிறது?

நதி நீரை பகிர்ந்து கொள்வதில் உலகெங்கும் பிரச்சனைகள் நிலவுகின்றன. அதற்கு இந்தியாவும், நேபாளமும் விதிவிலக்கு அல்ல.பருவமழை காலங்களில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள இந்த பிரச்சனையானது மோசத்திலிருந்து மிக மோசம் என்ற நிலையை எட்டுகிறது. குறிப்பாக ஜூன் - செப்டம்பர் இடையிலான பருவமழை காலத்தில்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஷாஹின் அஃப்ரிடி வரை

2019 ஐசிசி உலகக் கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்த உலகக்கோப்பை உருவாக்கிய நட்சத்திரங்கள் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லையென்றாலும், 2019 உலகக்கோப்பையில் தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவுசெய்த 5 இளம் நட்சத்திரங்கள் யார் என்பதை இங்கு விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :