இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கிறீர்களா? - இந்தப் பதிவு உங்களுக்காக மற்றம் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கிறீர்களா?
இன்ஸ்டாகிராம் நட்சத்திரம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் லார்சன். அவரை 3,36,000 பேர் பின் தொடர்கிறார்கள். அவர் தமது தற்கொலை கடிதத்தை தம் இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்து இருந்தார். அதற்கு 30 ஆயிரம் பேர் விருப்பக் குறி இட்டிருந்தார்கள். 8 ஆயிரம் பேர் பின்னூட்டம் செய்திருந்தார்கள். இது டென்மார்க்கில் விவாதமானதை தொடர்ந்து, இவரைப் போன்ற சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அந்நாட்டு அமைச்சர், ஊடகங்களுக்கு எத்தகைய பொறுப்பு உள்ளதோ, அத்தகைய பொறுப்பு சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் உள்ளது. அதனை உணர்ந்து அவர்கள் கருத்துகளை பகிர வேண்டுமென கூறி உள்ளார். லார்சன் பகிர்ந்த தற்கொலை கடிதத்தை இன்ஸ்டாவிலிருந்து நீக்க இரு தினங்கள் ஆகியுள்ளது. அவர் குணமாகி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

'உலகக்கோப்பை போட்டி இன்றும் தடைப்பட்டால் என்னவாகும்?'

பட மூலாதாரம், Clive Mason
இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் நாளை ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு போட்டி துவங்கும்.நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும். அதன் பின்னர் இந்திய அணி சேசிங் செய்யும்.
விரிவாகப் படிக்க: நாளையும் அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால்? - 7 கேள்வி பதில்கள்

'சர்ச்சைக்குரிய மசோதா செயலிழந்துவிட்டதாக ஹாங்காங் தலைவர் அறிவிப்பு’

பட மூலாதாரம், AFP
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா 'செயலிழந்துவிட்டது' என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார். செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் 'தோல்வியில் முடிந்தது' என கூறினார்.ஆனால் இந்த மசோதா முழுவதுமாக திரும்பப்பெறப்பட்டது என அவர் கூறவில்லை. போராட்டக்காரர்கள் மசோதாவைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்திய மசோதா ஏற்கனவே அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு

'பிரிட்டன் பிரதமரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்'

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருடன் பணிபுரிய டிரம்ப் மறுத்ததை தொடர்ந்து தூதருக்கான முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரிட்டனின் பிரதமர் அலுவலகம். அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் டிரம்பின் நிர்வாகம் "திறமையற்ற ஒன்று" என்று விமர்சனம் செய்த இமெயில் கசிந்த பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளில் தெரீசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விரிவாகப் படிக்க:கசிந்த இமெயில்கள் - பிரிட்டன் பிரதமரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

குழந்தைகள் இறப்பு விகிதம்: தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிகாரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்திருப்பது, நாட்டின் சுகாதார சேவை நடைமுறை குறித்தும், குழந்தைகள் எந்த அளவுக்கு கவனிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000வது ஆண்டில் இருந்து ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. குழந்தைகள் மரணத்துக்கான காரணங்களாக இருக்கும் காரணிகள், தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், குழந்தைகள் உயிர்வாழ்வதற்கு மிகவும் மோசமான இடங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
விரிவாகப் படிக்க:குழந்தையாக உயிர்வாழ இந்தியாவில் சிறந்த இடம் எது? -நிடி ஆயோக் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












