You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் வட கொரியா வருகை: ‘வரலாற்று நிகழ்வு’ - வட கொரிய ஊடகங்கள் பெருமிதம்
வட கொரியாவுக்கு வருகை புரிந்து அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த நிகழ்வை ''ஒர் அற்புத மற்றும் வரலாற்று நிகழ்வு'' என்று வட கொரிய அரசு ஊடகம் புகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று பதவியில் இருக்கும்போது வட கொரிய மண்ணில் காலடி வைத்த முதல் அதிபர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றார்.
தான் தென் கொரியாவில் இருந்தபோது 'சந்திக்க விருப்பமா?' என கிம்மிடம் ட்விட்டரில் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னெப்போதும் இல்லாத நடந்த இந்த கூட்டம் தொடர்பாக வட கொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ முழுவதுமான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
டிரம்பின் ஆலோசனைப்படி நடந்த இந்த சந்திப்பு 'வரலாற்று புகழ்மிக்க சந்திப்பு' என்று வட கொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் டிரம்பும், கிம்மும் ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர்.
இரு தலைவர்களும் "எதிர்காலத்தில் நெருங்கிய தொடர்பில் இருக்க" மற்றும் "கொரிய தீபகற்பதை அணுசக்தியற்ற பிராந்தியமாக்க மற்றும் இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான உரையாடல்களை மீண்டும் தொடங்குவதற்கு" ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கேசிஎன் ஏ கூறியுள்ளது.
வட கொரிய மக்கள் வெளி உலகத்தைப் பற்றிய செய்திகளை அரிதாகவே பெறுகிறார்கள், மேலும் அந்நாட்டில் அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்கள் பல தசாப்தங்களாக அமெரிக்காவை கடும் எதிரியாகவே சித்தரித்து வந்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ஒரு நண்பராக இணைந்து நடந்து வரும் காட்சிகளை காண்பது வட கொரிய மக்களுக்கு அசாதாரணமான நிகழ்வாகும்.
என்ன பேசினார்கள்?
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்தது.
அப்போது, இரு நாடுகளுக்கிடையே மீண்டும் அணுஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான குழுவை நியமிப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
"மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடத்தில் உங்களை பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்று கூறிய கிம்மை பார்த்து, "மிக முக்கியமான தருணம் இது… மிகப்பெரிய முன்னேற்றம்" என்று டிரம்ப் பதிலளித்தார்.
அதுமட்டுமின்றி, "கடந்த காலத்தை மறந்துவிட்டு, புதிய எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குவதற்கு இதன் மூலம் டிரம்ப் வித்திட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்" என்று கிம்மும், "இது உலகத்துக்கு மிக முக்கியமான நாள்" என்று டிரம்பும் தெரிவித்தனர்.
பின்னர், ஒருவரையொருவர் தமது நாட்டின் தலைநகரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்