You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு
அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனஹன் ஒரு கடிதம் மூலம் இந்த காலக்கெடுவை துருக்கி பாதுகாப்புத்துறை செயலர் ஹுலுஸி அகருக்கு விடுத்திருந்தார்.
அந்த கடித்ததில், அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் துருக்கியால் வைத்திருக்க முடியாது என்று பேட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ கூட்டாளிகளான இந்த இருநாடுகளும், எஸ்-400 ஏவுகணை அமைப்புமுறை காரணமாக பல மாதங்களாக சிக்கலுக்குள் சிக்கியிருக்கின்றன.
ரஷ்யாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக அமெரிக்கா வாதிடுகிறது.
மேலும், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு முறைக்கு பதிலாக அமெரிக்காவின் பேட்ரியாட் போர்விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை வலியுறுத்துகிறது.
அதிகளவிலான தன்னிச்சையான பாதுகாப்பு கொள்கைகளை கொண்டுள்ள துருக்கி, அமெரிக்காவின் 100 எஃப்-35எஸ் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதன் எஃப்-35 போர் விமானத் திட்டத்தில் அதிகளவிலான முதலீடுகளை குவித்துள்ளது. அந்த விமானத்துக்கு தேவையான 937 உதிரி பாகங்களை துருக்கி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இதனால் துருக்கி சந்திக்கக்கூடிய எதிர்விளைவுகள் என்ன?
பேட்ரிக் தனது கடித்ததில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புமுறை குறித்து பயிற்சி எடுப்பதற்கு துருக்கி அதிகாரிகள் சென்றிருப்பதாக வந்த தகவலை கேட்டு அமெரிக்கா மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"துருக்கி ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புமுறையை வாங்கினால் அமெரிக்காவின் எஃப்-35 விமானங்கள் துருக்கிக்கு கிடைக்காது," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முடிவை மாற்றிக் கொள்வதற்கு துருக்கிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்துடன் துருக்கி விமான படையினர் பங்குபெறுவதற்கான எஃப்-35 ரக விமானத்தின் விமான பயிற்சி திட்டத்தின் அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.
சரி ரஷ்யாவின் எஸ்-400 அமைப்புமுறை என்றால் என்ன?
எஸ்-400 டிரையம்ஃப் என்பது வான்வழி மூலம் தாக்க வரும் ஏவுகணையை தரை கட்டுப்பாட்டு வழியாக இடைமறித்து அதை வானிலே தகர்க்கும் உலகிலேயே மிகச் சிறந்த அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையாகும்.
இதன் தாக்கும் எல்லை 400 கி.மீ. ஒரு எஸ்-400 அமைப்புமுறையால் 80 இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்க முடியும்.
குறைவான உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்கள் முதல் வெவ்வேறு உயரங்களில் பறக்கும் போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் வரை எந்த வான் இலக்குகளையும் எஸ்-400 அமைப்பு முறையால் தாக்க முடியும் என்கிறது ரஷ்யா.
எஸ்-400 எப்படி வேலை செய்கிறது?
பிற செய்திகள்:
- பாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித உரிமை மீறல்கள்: 8,000 பேர் எங்கே?
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓர் இரவு தங்குவதற்கு 35,000 டாலர் - நாசா திட்டம்
- லண்டனில் "ரெயின், ரெயின் கோ அவே" பாடும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
- பாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரணங்கள்: விஷமுறிவு மருந்துகளின் தரத்தில் சந்தேகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்