You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவுக்கு உளவு பார்த்த 'திமிங்கிலம்' - ஆர்க்டிக் கடலோரம் கண்டுபிடித்த நார்வே
நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நார்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ஒன்று அது ரஷ்யாவை சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார்.
நார்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த சேனத்தை திமிங்கிலத்தில் இருந்து கழற்றினார்.
ஆனால், தமது சக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்துவதைப் போன்ற கருவி அல்ல என்று கூறியதாகவும் ரிக்கார்ட்சன் கூறினார்.
ரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது.
இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கிலம் பல முறை அணுகியுள்ளது. இந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெலூகா வகை திமிங்கிலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாகக் கொண்டவை.
காணொளி
பெலூகா திமிங்கிலத்தின் சேனம் அகற்றப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை நார்வேயின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்.ஆர்.கே. வெளியிட்டுள்ளது.
அந்த திமிங்கிலத்தின் தலையையும், துடுப்புப் பகுதியையும் சுற்றி அந்த சேனம் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் கிளிப்புகள் இருந்ததாகவும் பேராசிரியர் ரிகார்ட்சன் பிபிசியிடம் தெரிவித்தார். கோப்ரோ கேமராவுக்கான தாங்கி இருந்ததாகவும், ஆனால், அதில் கேமரா இல்லை என்றும் அவர் கூறினார்.
"அது போன்ற பரிசோதனைகளை தாங்கள் செய்வதில்லை என்றும், ஆனால், தங்கள் நாட்டுக் கடற்படை சில ஆண்டுகள் பெலுகா திமிங்கிலத்தைப் பிடித்து பயிற்சி அளித்ததாகவும், அது தொடர்புடையதாக இந்த திமிங்கிலம் இருக்கலாம் என்றும் ரஷ்ய சகா தெரிவித்தார்" என்று ரிக்கார்ட்சன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கடற்படை டால்பின்கள்
பனிப்போர் காலத்தில் அமெரிக்காவில் சிறப்புத் திட்டம் ஒன்றின்கீழ் டால்பின்களுக்கும், கடல் சிங்கம் என்னும் விலங்குகளுக்கும் கலிபோர்னியாவில் அந்நாட்டு கடற்படை பயிற்சி அளித்தது.
அமெரிக்க கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம நபர்கள் கடலுக்கு அடியில் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்க இத்தகைய கடல்வாழ் உயிரிகள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க கடற்படை இணைய தளம் குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்