You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம் மற்றும் பிற செய்திகள்
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.விமானத்தில் இருந்த நான்கு இந்தியர்களும் இதில் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாக உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளிடம் பேசிய வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், இந்த விபத்து குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் 'பிட்ச் அப், பிட்ச் அப்' என்று கூறுவது பதிவாகி உள்ளது.
இஸ்ரோ அமைப்பை உருவாக்கியதில் நேருவின் பங்களிப்பு இல்லையா? #BBCFactCheck
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை அமைத்ததில் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு எவ்வித பங்குமில்லை என்று சமூக ஊடகங்களில் தீவிரமாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த புதன் கிழமை அறிவித்த நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
எவரும் எதிர்பார்க்காத வேளையில் மோதி நிகழ்த்திய இந்த உரையில், இந்தியா "விண்வெளித்துறையில் வல்லரசாக உருவெடுத்துள்ளதாக" அறிவித்தார்.
விரிவாக படிக்க:இஸ்ரோ அமைப்பை உருவாக்கியதில் நேருவின் பங்களிப்பு இல்லையா?
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்
குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விவரங்கள் பிஎன்ஏஎஸ் என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க:டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்
மூன்று மாதங்களுக்கு முன் மூளைச் சாவடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை
கடந்த டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்த 26 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடுமையான ஆஸ்துமாவால் பாதிப்படைந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனையான கேத்ரீனா செக்கேரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்தார்.
32 வார கர்ப்பிணியான கேத்ரீனாவுக்கு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அவருக்கு சால்வடார் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறந்துள்ளது.
மூளைச் சாவு அடைந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிறப்பது போர்ச்சுகல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பூர்வகுடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டியை காண வந்த பூர்வகுடி மக்களுக்கு டிக்கெட் வழங்கக் கூடாது என்று தனக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அதன் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
பூர்வகுடிகளின் கலாசாரத்தை கடந்த ஆண்டு கொண்டாடிய ஆஸி ரூல்ஸ் கால்பந்து போட்டியை காண வந்த அந்நாட்டின் பூர்வகுடி மக்கள் மைதானத்துக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறுமாறு அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக டிக்கெட் வழங்குநர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்