You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏவுகணை சோதனைக்கு தயாராகிறது வட கொரியா? புகைப்படங்களால் சந்தேகம்
வட கொரியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ராக்கெட் அல்லது ஏவுகணை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சானும்தொங் என்ற அந்த இடத்தில்தான் வட கொரியா தனது பெரும்பாலான ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் சோஹே பகுதியிலுள்ள அந்நாட்டின் முக்கிய ராக்கெட் ஏவுத்தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் செய்திகள் வந்த நிலையில், இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
வட கொரியா மீண்டும் ஆயுத சோதனையை செய்யுமானால் அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"இரு நாடுகளுக்கிடையே புரிதல் இல்லாத ஒன்றை கிம் ஜாங்-உன் செய்தால், எதிர்மறையான ஆச்சரியத்தை அது தனக்கு வழங்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வட கொரியாவின் நடவடிக்கைகளை செயற்கைக்கோள் மூலமாக பார்க்கும்போது, அந்நாடு ஏவுகணையை விடுத்து, செயற்கைக்கோளை செலுத்துவதற்கே முயன்று வருவதை போன்று தெரிவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அந்நாட்டின் செயல்பாடு இருப்பதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
சானும்தொங்கில் என்ன நடக்கிறது?
கடந்த சில நாட்களாக வட கொரியாவின் சானும்தொங் பகுதியிலுள்ள ஏவுத்தளத்தை ஒட்டிய பகுதிகளில் மிகப் பெரிய வாகனங்களின் நடமாட்டம் தென்பட்டது. இதன் மூலம் வட கொரியா தனது செயற்கைக்கோளையோ அல்லது ஏவுகணைகளையோ இடமாற்றம் செய்வது போன்று தெரியவந்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஊடக நிறுவனமான என்பிஆர், வட கொரியாவின் இந்த சந்தேகத்திற்கிடமான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான வியட்நாமில் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவிடமிருந்து சிறந்த உடன்பாட்டை எட்ட முடியுமென்று கிம் ஜாங்-உன் நம்புவதாக பிபிசியின் தென் கொரிய செய்தியாளர் லாரா பிக்கெர் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்