டிரம்ப் - கிம் சந்திப்பு: வடகொரியா மற்றும் அமெரிக்கத் தலைவர்களின் இரண்டாம் சந்திப்பில் எதை எதிர்பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று, புதன்கிழமை, மற்றும் நாளை, வியாழக்கிழமை, நடைபெறவுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில்தான் முதல் முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.
இருப்பினும், சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பெரிதாக ஒன்றும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. எனவே, அதில் பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.
இன்று மாலை தனியாகச் சந்திக்கும் இருநாட்டுத் தலைவர்களும், பின்பு இரவு உணவுக்காக தங்கள் குழுவினருடன் கலந்துகொள்வார்கள். வியாழனன்றும் இரு தரப்பிலும் தொடர் சந்திப்புகள் நடக்கவுள்ள.
இந்தச் சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தடைகளும் நீடித்து வருகின்றன.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் வியட்நாமுக்கு வருகை தந்துள்ளார் அதிபர் டிரம்ப். முன்னதாக வடகொரிய தலைவர் வியட்நாம் தலைநகருக்கு ரயில் மற்றும் கார் வழியாக வந்து சேர்ந்தார்.
'கிம்மின் வலது கரம்'

பட மூலாதாரம், EPA
இன்றைய சந்திப்பில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ சாங் மற்றும் வடகொரியாவின் முக்கியப் பேச்சுவார்தையாளரான கிம் யோங்-சோல் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் சிங்கப்பூர் உச்சி மாநாட்டின்போதும், முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
முன்னாள் உளவுப்படை தலைவரான ராணுவ ஜெனரல் கிம் யோங்-சோல், வட கொரிய தலைவர் கிம்மின் வலது கரமாக வர்ணிக்கப்படுகிறார்.


சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் கிம் யோங்-சோல், 2010 ல் ராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தென் கொரிய போர்க்கப்பல்களின் மீதான வட கொரியாவின் தாக்குதல் திட்டங்களில் பின்புலமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
எங்கு சென்றாலும் தொடர்வண்டியில் செல்லும் கிம்
சுமார் 4000 கிலோ மீட்டர் தூரத்தை ரயில் மூலமே கடந்து, செவ்வாய்க்கிழமையன்று வியட்நாமின் டோங் டாங் எல்லை நிலையத்துக்கு ரயில் மூலம் வந்த கிம் ஜாங் உன்னுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
துப்பாக்கியால் துளைக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த 21 பெட்டிகளைக் கொண்ட சொகுசு ரயில்.

பட மூலாதாரம், Reuters
பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலிருக்கும் கிம் ஜாங்-உன்னின் தொடர் வண்டி, சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள டாங் டாங் இரயில் நிலையத்தை வந்தடைந்தது. பிறகு, அங்கிருந்து கார் மூலம் ஹனோய் நகரை நோக்கி கிம் புறப்பட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர்வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார்.
ரயில் மூலமாக சீனா வழியாக வியட்நாம் செல்ல இரண்டரை நாட்கள் ஆகும் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
சந்திப்புக்கு ஏன் வியட்நாம் தேர்வுசெய்யப்பட்டது?
தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வற்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது.

பட மூலாதாரம், Getty Images
கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே நகரத்தில் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர் காலக் கூட்டாளியான வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
முதலாளித்துவ பொருளாதாரத்தோடு, கம்யூனிச ஆட்சி நடக்கும் வியட்நாம், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்குகிறது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இரு நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடுநிலை நாடாக வியட்நாம் கருதப்படுவதாக கூறுகிறார் வல்லுநர் கார்ல் தாயெர்.
"டிம்ப் - கிம் உச்சி மாநாட்டிற்கு வியட்நாமை தேர்ந்தெடுத்திருப்பதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம், வியட்நாமால் உச்சிமாநாட்டிற்கு தேவையான உயர் பாதுகாப்பு சூழலை வழங்க முடியும். எனவே வியட்நாமால் இந்த மாநாட்டை சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்று அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்," என்றும் கார்ல் தாயெர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












