You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொலைக்காட்சி நட்சத்திரம் மீது தாக்குதல்: மற்றொரு இனவெறுப்பு நிகழ்வு மற்றும் பிற செய்திகள்
தொலைக்காட்சி நட்சத்திரம் மீது தாக்குதல்
அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் தாக்கப்பட்டது தொடர்பாக சிகாகோ போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது இனவெறி அல்லது ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதுள்ள வெறுப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாமென அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஜஸி ஸ்மோலெட் என்ற அந்த தொலைக்காட்சி நட்சத்திரத்தை முகத்தில் குத்தியும், அவர் மீது அமிலம் வீசியும் மற்றும் அவர் கழுத்தை நெறித்தும் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஒரு வெறுப்பு சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தெய்வ நிந்தனை வழக்கு
தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் ஒருவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் ஆசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் கழித்தார்.
ஜார்ஜ் பெர்ணான்டஸ்: தொழிற்சங்கவாதி, ஈழ ஆதரவாளர்
சோஷியலிஸ்ட் தலைவராக வாழ்க்கையைத் தொடக்கி, உலகின் மிகப்பெரும் வேலை நிறுத்தத்தை நடத்தி, பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
எப்போதும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். தமது துணிகளை தாமே துவைத்துக் கொண்டவர். பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போதுகூட பாதுகாவலர் வைத்துக்கொள்ளாதவர் அவர்.
1967-ம் ஆண்டு பம்பாய் தெற்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்து எம்.பி.யானார் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.
பின்னால் சக்திமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும், செல்வாக்குமிக்க சோஷியலிஸ்ட் தலைவராகவும் அறியப்பட்ட, பிறகு அதிகாரம் மிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் ஆன ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு தேசிய அளவில் முதல் முதலில் முக்கியத்துவம் கிடைத்தது அப்போதுதான்.
அந்த தேர்தலுக்கு முன்பு மும்பை முனிசிபல் கவுன்சிலில் ஒரு கவுன்சிலராகதான் இருந்தார் பெர்ணான்டஸ்.
'தாக்கரே' திரைப்பட விமர்சனம்
1960களில் தெற்கு மும்பையில் உள்ள தெருக்களில் இளம் வயதுடைய பால் தாக்கரே நடந்து செல்கிறார். அவர் பார்க்கும் இடமெல்லாம் தமிழில் எழுதப்பட்ட பதாகைகள் இருக்கின்றன. இந்த பதாகைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நிற்கும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தமிழில் தாக்கரேவை பார்த்து கோபமான முகத்துடன் கத்துகிறார். இப்படியாகத்தான், 'தாக்கரே' திரைப்படம் மும்பையில் வாழும் தமிழர்களை காண்பிக்க தொடங்குகிறது.
சிவசேனை எம்.பி சஞ்சய் ராவுட் மற்றும் வையகாம் 18 நிறுவனம் சேர்ந்து தயாரித்த இந்த திரைப்படமானது, தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரப்படமாக வெளியாகியுள்ளது.
சிவசேனை தலைவரை ஒரு 'ஹீரோவாக' சித்தரிக்கும் இப்படம், மும்பையில் உள்ள தமிழர்களை தவறானவர்களாக காண்பிக்கிறது.
ஹுவவேய் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு
சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை.
உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவவேய் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் வங்கி முறைகேடு, நீதியைத் தடுப்பது, தொழிநுட்பத் திருட்டு ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கையால் சீனா- அமெரிக்கா இடையிலான பதற்றம் கூடுவதுடன், இந்நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்கள் தடைபடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :