ஆப்கானிஸ்தான் சுரங்கத்தில் தங்கம் தேடிச் சென்ற 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான்
படக்குறிப்பு, விபத்து நடந்த ஆற்றுப்படுகை

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம்.

ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மொகமது ரஸ்தம் ராஹி கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினார்கள். எனினும் 30 பேரைத்தான் உயிருடன் மீட்க முடிந்தது.

விபத்தை நிகழ்ந்த இடத்தைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்கம் தேடிச் சென்ற ஆற்றுப்படுகைக்கு அருகில் சுமார் 60 மீட்டர் ஆழமுள்ள, குறுகிய சுரங்கப்பாதையைத் தோண்டியுள்ளனர்.

அதன் சுவர்கள் சரிந்து விழுந்ததால், அவர்கள் அனைவரும் அந்தச் சுரங்கத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டு இறந்தனர்.

ஆப்கானிஸ்தான் முழுதும் கனிம வளங்கள் பரவலாக உள்ளன. ஆனால், அங்குள்ள பெரும்பாலான கனிமச் சுரங்கங்கள் பழையவை. போதிய பராமரிப்பு இல்லாததால் அவை பாதுகாப்பு அபாயங்களைக் கொண்டுள்ளன.

Afghanistan gold mine

தாலிபன் அமைப்புடனான மோதலால், ஆஃப்கன் அரசால் கனிம வளங்கள் அனைத்தையும் தோண்டி எடுத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை.

தாலிபன்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகிய இரு தரப்புக்குமே கனிமச் சுரங்கங்கள் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பதால், சட்டவிரோதமாகக் கனிமங்களை அகழ்வது தொடர்பாக அவர்களுக்குள் நடக்கும் மோதல்களின் எண்ணிக்கை சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

"அரசின் கட்டுப்பாடு இல்லாமல், பல தசாப்தங்களாக அந்தப் பகுதியில் இருக்கும் கிராமவாசிகள் சுரங்களில் இருக்கும் தங்கத்தைத் தேடி, விற்கும் தொழிலில் உள்ளனர்," என மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இறந்தவர்களுக்கு இழப்பீடாக, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ஆஃப்கனி வழங்கப்படும் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: