You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரண தண்டனை: தனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த சிறைக் கைதி
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
மரணத்தை தேர்வு செய்த கைதி
விஷ ஊசி போட்டு மரண தணடனை வழங்கப்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கைதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 1982 முதல், டேவிட் ஏர்ல் மில்லர் எனும் அவர் 36 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
விஷ ஊசி மூலம் மரண தண்டனை வழக்கப்படுவதே அங்கு முக்கிய வழிமுறையாக உள்ளது.
ஹமாஸை கண்டிக்கும் தீர்மானம் தோல்வி
பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அந்த அமைப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
இதற்கு 87 நாடுகள் ஆதரவளித்திருந்த நிலையிலும், அதை நிறைவேற்ற போதுமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த தீர்மானத்தை எதிர்த்து 57 நாடுகள் வாக்களித்தன. 33 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய 'லிட்டில் மெஸ்ஸி'
கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் ரசிகராக பரவலாக அறியப்படட்டு பிரபலமான ஆப்கானிஸ்தான் சிறுவனின் குடும்பம், தாலிபனின் அச்சுறுத்தல்களால் இரண்டாவது முறையாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
'லிட்டில் மெஸ்ஸி' என் அழைக்கப்படும் முர்தாசா அகமதி 2016இல் மெஸ்ஸியை சந்தித்த படம் பிரபலமானது.
பிரான்ஸ் வன்முறை: இழுத்து மூடப்படுகிறது ஈபிள் கோபுரம்
பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான "மஞ்சள் ஜாக்கெட்" என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.
மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் மூடப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்