You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்" - டேவிட் அட்டன்பரோ
ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோ தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றமானது நாகரிகங்களின் சரிவு தொடங்கி, "இயற்கை உலகின் பெரும்பகுதி" அழிந்து போவதற்கு வழிவகுக்கலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய டேவிட் அட்டன்பரோ மேற்கூறிய கருத்துகளை தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கைக்குப் பின்னர் நடைபெறும் மிக முக்கியமான கூட்டமாக இது கருதப்படுகிறது.
"தற்போதைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட இடர்களை உலகம் முழுவதும் நாம் சந்தித்து வருகிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களில் நமது மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்" என்று அவர் மேலும் கூறினார்.
"நாம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நமது நாகரிகம் சரிவடைவதுடன், உலகம் அழிவுப்பாதையை நோக்கி செல்லும்."
தொடக்க விழாவில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே பல நாடுகளின் வாழ்க்கை மற்றும் இறப்பு சார்ந்த ஒன்றாகிவிட்டது என்று தெரிவித்தார்.
குறைந்தளவு கார்பனை வெளியேற்றும் இலக்கை நோக்கிய பயணத்தில் உலக நாடுகள் இன்னமும் பாதி தூரத்தை கூட அடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
உலகின் வெப்பநிலை உயர்வை 1.5Cக்கு குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மேற்கோள் காட்டிய கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த ஐபிசிசி குழுவின் அறிக்கைக்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
உலகின் வெப்பநிலை உயர்வை 1.5Cக்குள் வைத்திருத்தல், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகள் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை 45 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை ஐபிசிசியின் அறிக்கை விளக்குகிறது.
ஆனால், நான்காண்டுகால குறைவிற்கு பின்னர் மீண்டும் கார்பன் உமிழ்வுகளின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்