You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது குற்றப்பதிவு செய்ய பரிந்துரை: போலீஸ்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் அவரது மனைவி சாரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லஞ்சம் மற்றும் மோசடி வழக்குகளில் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டுமென இஸ்ரேலிய போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.
ஆதாயம் பெறும் நோக்குடன் பெசிக் தொலைத்தொடர்வு நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டார் என அவர் மீது சந்தேகிக்கப்படுகிறது. அதாவது பெஞ்சமின், தனக்கும் தனது மனைவிக்கும் நேர் மறையான ஊடக விளம்பரத்தை இந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதற்கு பலனாக பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், தொடக்கத்திலிருந்தே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் பெஞ்சமின்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீது மற்றொரு லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. போலீஸ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.
ஆனால், இந்த குற்றச்சாட்டினை அடிப்படை ஆதாரமற்றது என பெஞ்சமின் மறுத்தார்.
இந்த சூழலில் இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல்தான் முடிவு செய்ய வேண்டும்.
பல முறை குற்றச்சாட்டுகள்
பெஞ்சமின் பல முறை ஊழல், முறைகேடு வழக்குகளில் விசாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எளிதில் முறிந்துவிடக் கூடிய ஓர் கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார் 69 வயதான பெஞ்சமின்.
இந்த குற்றச்சாட்டுகளால் முன் கூட்டியே தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மிகவும் உறுதியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்.
அடுத்தாண்டு நவம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :