You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ் வன்முறை: "போராட்டக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்" - அதிபர் மக்ரோங்
பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினருடன் மோதிய போராட்டக்காரர்களை அந்நாட்டு அதிபர் மக்ரோங் கடுமையாக கண்டித்துள்ளார்.
"அதிகாரிகளை தாக்கியவர்களை நினைத்து நான் அவமானப்படுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். "பிரெஞ்சு குடியரசில் வன்முறைக்கு இடமில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் காவல்துறை கலைக்க முயன்றதால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
"மஞ்சள் ஜாக்கெட்" என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டம் முதலில் டீசல் விலை அதிகரித்ததனால் தொடங்கப்பட்டது. அது பின்னர் வாழ்க்கை நடத்துவதற்கான செலவில் உயர்வு உள்ளிட்ட மக்ரோங்கின் பிற கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் களத்தில் இறங்கியதால் போராட்டம் விரிவடைந்தது.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதில் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தை தவிர பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றன. தலைநகர் பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8000 பேர் கலந்து கொண்டனர்.
என்ன நடந்தது?
போராட்டத்தின் காரணமாக பாரிஸில் சுமார் 5000 காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முக்கிய கட்டடங்களான அதிபரின் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றை தடுத்து மெட்டல் தடுப்புகள் வைத்திருந்தனர்.
போராட்டத்தின் செய்தி தொடர்பாளர், போராட்டம் அமைதியாக நடந்தது என்று தெரிவித்தார்
"நாங்கள் இங்கு காவல்துறையினருடன் சண்டையிட வரவில்லை. எங்கள் குறைகளை அரசு கேட்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
ஆனால், போராட்டக்காரர்களில் சிலர் தடுப்புகளை தகர்த்தனர். தீயிட்டு கொளுத்தினர், மக்ரோங்கிற்கு எதிராக கோஷங்கள் முழங்கி காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்தனர்.
காவல்துறையினர் பல பகுதிகளில் கலவரங்களை தடுத்த போதும், அது மாலை வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன.
நான்கு அதிகாரிகள் உட்பட 19 பேர் இந்த போராட்டத்தில் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுதொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேறு எங்கெங்கு போராட்டங்கள் நடைபெற்றன?
இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தை மெதுவாக்க சில இடங்களில் சாலைகளை அடைத்திருந்தனர்.
சிறு சிறு மோதல்களும் இடம்பெற்றன, அது தொடர்பாக 130 கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், கடந்த வாரத்தை காட்டிலும் போராட்டமும் வன்முறையும் குறைந்த அளவிலேயே இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் 280,000 பேர் பங்கேற்றனர். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர்.
என்ன சொன்னார் மக்ரோங்?
பாதுகாப்பு படையை அவர்களின் தொழில்திறன் மற்றும் தைரியத்துக்காக பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் மக்ரோங்.
மேலும், "காவல்துறையினரை தாக்கியவர்கள் குறித்து நான் வெட்கப்படுகிறேன். பிற குடிமக்களையும், பத்திரிகையாளர்களை தாக்கியவர்களையும் நினைத்து நான் வெட்கப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
டோலூஸ் மற்றும் பெய்சியர்ஸில் நிருபர்கள் பலர் தாக்கப்பட்டதாக ஃபிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அதிதீவிர வலதுசாரி கட்சியின் தலைவரான மரைன் லீ பென்னால் இந்த போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் உள்துறை அமைச்சர் நேர்மையற்றவர் என டிவிட்டரில் சாடியுள்ளார்.
போராட்டத்துக்கு என்ன காரணம்?
பிரான்ஸ் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்து, கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம்.
2000களின் தொடக்கங்களிலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை.
உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் தெரிவித்தார்.
அது என்ன `மஞ்சள் ஜாக்கெட்` இயக்கம்?
பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும்.
சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :