You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக சுமார் 70 வருடங்கள் போராடியவரும், 103 வயதில் அமெரிக்க கடலோரப்படையில் இணைந்து சாதனை படைத்த ஆப்பிரிக்க-அமெரிக்கருமான ஒலிவியா ஹுக்கர் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார்.
"நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல்" என்று ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமா அழைத்தார்.
மாலியில் முன்னேறும் பிரான்ஸ் படைகள்
பிரான்ஸ் நாட்டு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாலியின் மிக முக்கிய ஜிகாதிய தலைவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டதாக மாலியின் ராணுவம் தெரிவித்துள்ளது.
மாலியின் மத்திய மோப்டி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், வெள்ளிக்கிழமையன்று அமடூ கூபா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் படையினரால் கொல்லப்பட்ட கூபா மாலியிலும், புர்கினா பாசோ ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த தாக்குதலை நடத்திய ஜமாஅத் நஸ்ரத் அல் இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) என்ற அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுள் ஒருவராவார்.
பிரெக்ஸிட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா?
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில் பிரெக்ஸிட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அதன் தலைவர் டொனால்டு டஸ்க் பரிந்துரை செய்துள்ளார்.
பிரிட்டனின் சமரச நடவடிக்கையை தொடர்ந்து, இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற தனது முடிவை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செத் மாற்றிக்கொண்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டை முன்னிட்டு பெல்ஜியத்தின் தலைநகரான புரூசெல்ஸுக்கு வந்த பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மக்களை சாடிய பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினருடன் மோதிய போராட்டக்காரர்களை அந்நாட்டு அதிபர் மக்ரோங் கடுமையாக கண்டித்துள்ளார்.
அதிகாரிகளை தாக்கியவர்களை நினைத்து தான் வெட்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். "பிரெஞ்சு குடியரசில் வன்முறைக்கு இடமில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் காவல்துறையினர் கலைக்க முயன்றதால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :