You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த இராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐநாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி ஆளுநரகங்களில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
12 ஆயிரம் பேர் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என்று ஐநா அறிக்கை குறிப்பிடுகின்றது. 2014ம் ஆண்டு இராக்கின் பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ், அந்த குழு விரும்பாத அனைவரையும் கொன்று குவித்தது.
நியூயார்க் பைப் வெடிகுண்டு வழக்கு - குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பரபரப்பு மிகுந்த பேருந்து நிலையத்தில் பைப் வெடிகுண்டை வெடிக்கச்செய்த வங்கதேச குடியேறி மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்த 28 வயதாகும் அக்கையேட் உல்லாஹ் கடந்த டிசம்பர் மாதம் பைப் வெடிகுண்டை வெடிக்கசெய்ததில் அவருக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டதுடன், ஐந்து பேருக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டது.
விசாரணை அதிகாரிகளிடம் தான் இந்த தாக்குதலை ஐஎஸ் இயக்கத்துக்காக செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட விமான ஊழியர்கள்
கடந்த மாதம் ஸ்பெயின் விமான நிலையம் ஒன்றின் தரையில் படுத்திருந்த புகைப்படம் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆறு விமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளாதாக ரியான்ஆர் அறிவித்துள்ளது.
ஊழியர்களின் தவறான நடத்தை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விமான நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தங்களது விமானம் திருப்பிவிடப்பட்டதால் ஸ்பெயினின் மலகா விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் காத்திருக்க சூழ்நிலை ஏற்பட்டது.
இறுதிக்கட்டத்தில் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்
அமெரிக்காவில் நடந்துவரும் இடைக்கால தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக இந்த இடைக்கால தேர்தல்கள் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கிழக்கு பகுதி மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குச்சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.
வாஷிங்டன் டிசி மற்றும் அனைத்து 50 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :