'ஆள்கடத்தல், கொலை, சூதாட்டம்' - சிறையில் முற்றுப்பெற்ற நிஜ தாதாவின் கதை

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சிறையில் தாதா கொலையா?

ஆள்கடத்தல், கொலை, சூதாட்டம், அதிக வட்டிக்கு கடன் தருவதென ஒரு காலத்தில் கோலோச்சிய ஜேம்ஸ் அமெரிக்கா மேற்கு வெர்ஜினா மாகாணத்தில் உள்ள சிறையில் இறந்த நிலையில் கிடந்தார். கொலை என்ற கோணத்தில் இதனை விசாரித்து வருகின்றனர், சிறை துறையினர். பதினொரு கொலை வழக்கில் 2013 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜேம்ஸ். இவரது வாழ்வினால் உந்தப்பட்டு பல சினிமாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளர் விடுதலை

ஹங்கேரி - செர்பியா எல்லை வழியே, ஐரோப்பிய ஒன்றித்துக்குள் செல்ல முயன்ற அகதிகளை எட்டி உதைத்த ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண் ஒளிப்பதிவாளர், அகதிகளை எட்டி உதைக்கும் காட்சியானது சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. தேச எல்லைகளை கடந்து அவரது செயலுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன. இது தொடர்பாக நடந்த வழக்கில் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வெளியிட்டுள்ளது ஹங்கேரி உச்ச நீதிமன்றம்.

கொல்ல சதி

தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இரான் செயற்பாட்டாளரை இரான் உளவு அமைப்பு கொல்ல திட்டமிடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளது டென்மார்க் அரசு. இரானில் உள்ள தமது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது டென்மார்க். அதுமட்டுமல்லாமல் இரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இரான் இந்த குற்றச்சாடை மறுத்துள்ளது.

எட்டாத உதவி

சிரியா போரினால் பாதிக்கப்பட்டு சிரியா - ஜோர்டான் எல்லையில் உள்ள முகாம்களில் தவித்துக் கொண்டிருக்கும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை சுமந்து சென்ற வாகனங்கள் பாதுகாப்பு காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டன என்கிறது ஐ.நா. நாற்பது லாரிகளில் வந்த உதவி பொருட்களும் சனிக்கிழமை அந்த முகாம்களை சேர வேண்டும். இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால், உதவிகள் செல்வது தாமதப்படலாம். ஏற்கெனவே, அங்கு நிலவும் மோசமான சுகாதாரத்தால் குழந்தைகள் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதி சிரியா ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

புயலில் தவிக்கும் இத்தாலி

இத்தாலியில் கனமழை மற்றும் புயலுக்கு 11 பலியாகினர் மேலும் பல இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகளும் சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன.மணிக்கு 180கிமீ வேகத்தில் காற்று வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடற்கரை நகரான டெராசினாவில் வீசிய இரண்டு சுழற்காற்றுகளால் ஒருவர் பலியானார் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.கால்வாய் நகரான வெனிஸில் புகழ்பெற்ற சதுக்கங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன மேலும் நகரின் 75 சதவீத பகுதி நீரால் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :