You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிபர் டிரம்பை விமர்சித்தவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு - ஒருவர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விமர்சிக்கும் முக்கிய நபர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக 56 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் தெரிவிக்கிறது.
சமீப நாட்களில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் நடிகர் ராபர்ட் டி நிரோ உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கு 12 பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
புளோரிடாவிலும், நியூயார்க் நகரத்திலும் வெள்ளிக்கிழமையன்று இரண்டு பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் கோரி புக்கரின் முகவரி எழுதப்பட்ட மர்ம பார்சல் ஒன்று புளோரிடா தபால் நிலையத்தில் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகம் கூறுகிறது.
அதே சமயம், மன்ஹாட்டனில் உள்ள பார்சல் ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விமர்சிக்கும் முக்கிய நபர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டுகள் அனுப்பப்படுவதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த செய்தியும் வந்துள்ளது.
மர்ம பார்சல் தொடர்பாக புளோரிடா தபால் நிலையத்தில் எஃப்.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.
மியாமியில் உள்ள ஓபா-லாகா தபால் நிலையத்தின் பாதுகாப்பு கேமராவின் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு பிரிவினரும் மோப்ப நாய்களும் தபால் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்திருப்பதாக மியாமி-டேடே கவுண்டி போலீசார் தெரிவித்தனர்.
நியூயார்க் நகரத்தின் மேற்கு 52 வது தெருவில் உள்ள தபால் அலுவலகத்தில் இரண்டு பார்சல்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்றில் புக்கரின் முகவரியும், மற்றொன்றில் தேசிய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பரின் முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :