சாகசம் செய்ய முயன்ற பாடகர் விமானத்தில் இருந்து விழுந்த பரிதாபம்

பட மூலாதாரம், JON JAMES/INSTAGRAM
விபரீதமான சாகச முயற்சி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய ரக விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது அதன் இறக்கை ஒன்றின்மீது ஏறி இசைத் தொகுப்பு ஒன்றுக்கு படப்பிடிப்பு நடத்திய இளம் பாடகர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
34 வயதாகும் ஜோன் ஜேம்ஸ் மெக்மர்ரி, இறக்கையின் நுனியில் நடந்துகொண்டிருந்தபோது, விமானம் நிலை தடுமாறியபோது, அவர் கீழே விழுந்து இறந்தார்.
இந்த படப்பிடிப்புக்கு தீவிரமான பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் தனது பாரஷூட்டையும் திறக்கவில்லை என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.

'ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாக நேரும்'

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY
அமெரிக்காவின் ஆயுதங்களை நிலை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் இடம் அளித்தால், ரஷ்யா அதற்கு ஏற்ற வகையில் பதில் அளிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
அவ்வாறு அமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
1987இல் கையெழுத்தான சோவியத் கால அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பனிப்போர் காலத்துக்குப் பின் தங்கள் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை நேட்டோ நாடுகளும் வியாழன்று தொடங்கியுள்ளன.

கஷோக்ஜி கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - சல்மான்

பட மூலாதாரம், AFP
துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க தான் உறுதியாக இருப்பதாக செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற ஒரு வணிக குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், ''அனைத்து செளதி மக்களுக்கும் வலி தருவதாக இந்த குற்றம் நடைபெற்றுள்ளது,'' என்று கூறினார்.
ஜமால் கஷோக்ஜியின் கொலையில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை முகமது பின் சல்மான் முன்பு மறுத்திருந்தார்.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

நேப்கின்கள் மீதான வரி ரத்து

பட மூலாதாரம், AFP
ஏப்ரல் 2019 முதல் பெண்கள் பயன்படுத்தும் நேப்கின்கள் மீதான 15% வரியை ரத்து செய்யப்போவதாக தென்னாப்பிரிக்காவின் புதிய நிதி அமைச்சர் டிட்டோ மும்போவெனி தெரிவித்துள்ளார்.
நேப்கின்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மாதவிடாய் காலங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்ல இயலவில்லை என்பதால் அதன் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பரவலாக கோரிக்கை நிலவி வந்தது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












