"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்": மெலனியா டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்": மெலனியா டிரம்ப்

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், "வலுவான ஆதாரத்தை" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விசாரணை தொடக்கம்

சோயஸ் ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில், சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ராக்கெட்டில் இருந்த ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி மற்றும் அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பணி நிமித்தமாக அவர்கள் செல்ல இருந்தனர். ராக்கெட் புறப்பாடு சரியாக இருந்தாலும், அடுத்த 90 நொடிகளில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கோளாறு இருப்பதாக கூறியதையடுத்து ராக்கெட் தரையிரக்கப்பட்டது.

ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் எஸ் சலாமில் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 43.

மொஹமத் டஹ்ஜி எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

டஹ்ஜியின் சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டாலர்கள் என குறிப்பிட்டிருந்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, டான்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்திருந்தது. 2017ஆம் ஆண்டு அறிக்கையில், ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் மொஹமத் டஹ்ஜி என்று கூறப்பட்டது.

மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்

அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன்.

மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையானது.

இந்த செய்தி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :