தன்பாலின தம்பதிகளுக்கு விசா வழங்கப்படமாட்டாது: அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
தன்பாலின ஈர்ப்புடைய வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும், ஐ.நா ஊழியர்களுக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. முன்பே விசா பெற்று இருப்போர் டிசம்பருக்குள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது திருமணம் செய்துகொண்டு விசாவை மாற்றிக் கொள்ள வேண்டும்.
2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முந்தைய சட்டத்தை திருத்தியமைத்து இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு திருமணம்
தற்சமயம், 25 நாடுகள் தன்பாலின ஈர்ப்பு திருமணத்தை அங்கீகரித்துள்ளது. அதேநேரம், 71 நாடுகளில் இன்னும் இது குற்றமாகவே கருதப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய கொள்கை ஐ.நா குறிப்பாணை ஒன்றில் சுற்றறிக்கைவிடப்பட்டுள்ளது.
அந்த குறிப்பாணையில், "ஐ.நா. வில் இருக்கும் அல்லது ஐ.நாவுக்கு வர கோரும் தன்பாலின இணையர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து திருமண சான்றிதழை அளிக்க வேண்டும். அப்போதுதான் ஜி-4 விசா கிடைக்கும்."

பட மூலாதாரம், Getty Images
ஜி 4 விசாவானது சர்வதேச அமைப்புகளின் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் வழங்கப்படும் ஒரு விசாவாகும்.
இழைக்கப்படும் அநீதி
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்திருக்கும்பட்சத்தில் இந்த ஜி 4 விசா பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
ஆனால், பெரும்பாலான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு குற்றமாக பார்க்கப்படும் இந்த சமயத்தில் இந்த அறிவிப்பு அநீதியான ஒன்று என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஐ.நா-வுக்கான முன்னாள அமெரிக்க தூதர் சமந்தா பவர் இந்த கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
எல்.ஜி.பி.டி சமத்துவத்திற்காக குரல் கொடுக்கும் ஐ.நா க்ளோப் இந்த சட்ட மாற்றத்தை துரதிருஷ்டமானது என்று கூறி உள்ளது.
"அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண அரங்குகளுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால், இவ்வகை திருமணத்தை குற்றமாக பார்க்கும் தம் நாடுகளுக்கு செல்லும்போது அவர்கள் வழக்கு விசாரணை தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்" என்று கூறி உள்ளது.
விதிவிலக்கு உள்ளது
தன்பாலின ஈர்ப்பை குற்றமாக கருதும் நாடுகளிலிருந்து தூதரகத்தில் பணிபுரிய வரும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு விதிவிலக்கு உள்ளது. அந்நாட்டு அரசாங்கமே தன்பாலின ஈர்ப்பாளர்களை தூதரகத்தில் பணி செய்ய அனுப்பும்போது, அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்த சட்ட திருத்தத்தால் 105 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
தங்களது இணையின் விசாவை தக்கவைக்க தன்பாலின ஈர்ப்பு கொண்ட 10 ஐ.நா ஊழியர்கள் அடுத்தாண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை கொள்கை தொடர்பான இதழொன்று கூறுகிறது.
ஐ.நா மனித உரிமை கண்காணிப்பகத்தின் இணை இயக்குநர் அக்ஷய குமார் இந்த சட்ட திருத்தம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













