‘டாங்கிகள், துப்பாக்கி சந்தை, போர் சத்தம்’- 30 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது ஆஃப்கன்?

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் 1970 ஆம் ஆண்டு தன் அண்டை வீட்டார் ரஹ்மத்துல்லாஹ் சஃபியுடன் நண்பராகிறார். ரஹ்மத்துல்லா ஆஃப்கனை சேர்ந்தவர்.

ரஹ்மத்துல்லாஹ் 1988 ஆம் ஆண்டு ஜானை தம் சொந்த நாட்டிற்கு அழைக்கிறார். சொந்த நாடு என்றால் மலைகளும், காடுகளும் அடங்கிய சுற்றுலா பகுதிக்கு அல்ல. போர் பாதித்த பகுதிக்கு செல்லலாமா என்று கேட்கிறார்.

இருவரும் ஒரு சவாலான, அசெளகர்யமான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

ஜான் அந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும், பயணக்குறிப்புகளையும் `கோயிங் - இன்ஸைட்' எனும் டிஜிட்டல் புத்தகமாக வெளியிடுகிறார். வெளி பிரசுரம் கிடையாது. தம் சந்ததி அந்த காலக்கட்ட ஆஃப்கன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டிஜிட்டலாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் 30 ஆண்டுக்கு முந்தைய ஆஃப்கன் குறித்து தெளிவான சித்திரத்தை நமக்கு தருகிறது.

ஜானும், ரஹ்மத்தும்

தொடக்க பள்ளி ஒன்றில் துணை தலைமையாசிரியராக பணிபுரிந்திருக்கிறார் ஜான். ரஹ்மத் ப்ளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்.

இங்கிலாந்து வருவதற்கு முன்னதாக ஆஃப்கன் சிறப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். அவரின் மனைவி வழக்குரைஞர்.

ஆனால், இவை அனைத்தும் கடந்த காலம் ஆகிபோனது. ஆம், 1973 ஆம் ஆண்டு ஆஃப்கனின் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அரசர் ஜாகீர் ஷாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் சோவியத் ஆஃப்கனை ஆக்கிரமித்தது.

சோவியத்தை எதிர்த்து போராடிய முஜாஹீதின் குழு ஒன்றை வழிநடத்தினார் ரஹமத்துல்லாஹ். அதன்பின் அவருக்கு பிரிட்டன் புகலிடம் வழங்கியது.

ரஹ்மத்துல்லாஹ் முஜாஹீதின்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கிறார். ஜான் அஃப்கன் மக்களின் வாழ்நிலையை உற்று நோக்கி அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.

பெஷாவர் பகுதிக்கும் பயணித்து இருக்கிறார்.

துப்பாக்கியும் சில கேள்விக்களும்

முஜாஹீதின்கள் துப்பாக்கியுடன் படம் பிடித்து கொள்வதை பெரிதும் விரும்பினார்கள் என பதிவு செய்கிறார் ஜான்.

அந்த சூழலில் பெரும்பாலான ஆஃப்கன் மக்கள் பாஸ்போர்ட் என்பதை பார்த்ததில்லை என்று பதிவு செய்யும் ஜான், பிரிட்டன் விலைவாசி குறித்து கேட்ட அம்மக்கள் ஆச்சர்யம் அடைந்ததாவும், டாய்லெட்டில் பேப்பர் பயன்படுத்துவது அவர்களுக்கு விநோதமாக இருந்ததாகவும் பதிவு செய்கிறார்.

பெஷாவரிலிருந்து தெற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டாரா ஆதாம் கெல் பகுதி முழுவதும் துப்பாக்கி கடைகள் நிறைந்து இருந்ததாக தன் குறிப்பில் எழுதி இருக்கிறார் ஜான்.

அவர் வார்த்தைகளிலேயே: "ஏறத்தாழ அனைத்து கடைகளிலும் துப்பாக்கியை உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள் அல்லது அவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நீங்கள் அனைத்து விதமான துப்பாக்கிகளையும் நாம் வாங்கலாம்" என்கிறார்.

மேலும் அவர், "ஒரு போர் பகுதியில் நான் இருந்தாலும் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். என்னால் இந்த நாட்களை எப்போதும் மறக்க முடியாது. ஆஃப்கன் மக்களின் விருந்தோம்பல் பண்பு, இரக்கம், அவர்களின் தயாள குணம், இவை அனைத்தும் என் ஆஃப்கன் பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது" என்று பதிவு செய்கிறார் ஜான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :