கடலில் தனியாக சிக்கியிருக்கும் இந்திய மாலுமி; மீட்கும் முயற்சிகள் தீவிரம்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

கடலில் சிக்கியிருக்கும் இந்திய கடலோடி

கோல்டன் க்ளோப் உலகத்தை சுற்றிவரும் படகுப்போட்டியில் கலந்து கொண்டு தீவிரமாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தனியாக சென்ற மாலுமி அபிலாஷ் டாமி, மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சிக்கிக்கொண்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட கடும் புயலால் அவரது படகு, ’துரியா’ உடைந்து போனது. இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் தாம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இடத்தை விட்டு நகர முடியாமல் இருப்பதோடு, சாப்பிட மற்றும் குடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடுக்கு காரணம் வளைகுடா நாடுகள் - இரான்

இரானில் ராணுவ அணிவகுப்பில் ஒரு குழந்தை உட்பட 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம், அமெரிக்கா ஆதரவில் இருக்கும் வளைகுடா நாடுகள் என அந்நாட்டு தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இரானில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க அமெரிக்காவின் கைபாவையாக இருக்கும் நாடுகள் செயல்படுவதாக தலைவர் அயோதல்லா அலி தெரிவித்துள்ளார்.

இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது துப்பாக்கிதாரிகள் சுட்டதில், பொதுமக்கள் உள்ளிட்ட 25 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக அஹ்வஸ் தேசிய எதிர்ப்பு மற்றும் ஐ.எஸ் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய அதிவேக ரயில் சேவை

சீன பெருநிலப் பகுதியை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை ஹாங்காங்கில் தொடங்கப்பட்டது.

இந்த அதிவேக ரயில் சேவையால் ஹாங்காங்கில் இருந்து தென் சீன நகரமான குவான்ஜோவிற்கு 40 நிமிடங்களில் பயணம் செய்யலாம். இதற்கு முன்னிருந்த சேவையுடன் ஒப்பிடும் போது அதன் பாதிக்கும் குறைவான நேரத்தில் இந்த பயணம் இருக்கும்.

ஹாங்காங், ஷென்ஜென் மற்றும் குவான்ஜோ நகரங்களில் இதனால் தொழில்கள் பெருகக்கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று ஒப்பந்தம்

வத்திக்கான் மற்றும் கம்யூனிச நாடான சீனாவுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் சீனா நியமனம் செய்த 7 ஆயர்களை போப் ஃபிரான்ஸிஸ் அங்கீகரித்துள்ளார்.

1951ஆம் ஆண்டில் ஆயர்கள் நியமனத்தில் சிக்கல் எழுந்ததில் சீனாவுக்கும் வத்திக்கானுக்குமான ராஜதந்திர உறவுகள் முறிந்து போனது.

சீனாவில் சுமார் 10 மில்லியன் கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

பழைய காயங்களை இது ஆற்றுவதோடு, சீனாவில் உள்ள மொத்த கத்தோலிக்கர்களின் ஒற்றுமையை இது வெளிகொண்டுவரும் என போப் ஃபிரான்ஸிஸ் நம்புவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :