பாலியல் வழக்கு: 50 வருட சிறையில் இருந்து அப்பாவியை காப்பாற்றிய நாய்

பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையிலிருந்து உரிமையாளரை காப்பாற்றிய நாய்

பட மூலாதாரம், JENNY COLEMAN/OREGON INNOCENCE PROJECT

அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட் 50 ஆண்டு சிறைத்தண்டனை அவர் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த வழக்கில் 42 வயதான ஜோஸுவா ஹார்னெர் என்பவர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2017ஆம் ஆண்டு உண்மை என்பதாக நிரூபிக்கப்பட்டது.

தான் செய்த குற்றத்தை வெளியில் சொல்லாமல் தன்னை தடுப்பதற்காக ஹார்னெர் தன் கண்ணெதிரே லாப்ரடார் ரக நாயை சுட்டுக்கொன்றதாக இந்த புகாரை எழுப்பிய பெண் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஆய்வு செய்த 'ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்' என்னும் குழுவை சேர்ந்தோர் அந்த நாய் வேறொரு வீட்டில் இருந்ததை கண்டறிந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஏகமனதாக தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், தாங்கள் இந்த வழக்கு சார்ந்த ஆதாரங்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது அவை "பலத்த சந்தேகத்தை" ஏற்படுத்தியதாகவும் அரசு சாரா சட்ட உதவி அமைப்பொன்று தெரிவித்தது.

இந்த வழக்கு சார்ந்த சந்தேகங்களை முதலாவதாக ஒரு மாவட்ட வழக்கறிஞரிடம் கடந்த ஏப்ரல் மாதம் எழுப்பிய பிறகு, அவருடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியதாக அந்த அமைப்பு கூறுகிறது.

அந்த நாயின் இருப்பிடத்தை கண்டறிவதன் மூலம் இந்த வழக்கில் திருப்புமுனை உண்டாகும் சூழ்நிலை உருவானது. ஏனெனில், குற்றஞ்சாட்டப்பட்ட ஹார்னெர், தான் அந்த நாயை சுட்டுக்கொல்லவில்லை எனவும், அதை நிரூபிப்பதன் மூலம் புகாரளித்தவரின் கூற்று பொய்யானது என்று நிறுவ முடியுமென்றும் அவர் கூறியிருந்தார்.

நாய்

பட மூலாதாரம், JENNY COLEMAN/OREGON INNOCENCE PROJECT

குற்றஞ்சாட்டப்பட்டவர் உதாரணத்துடன் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்ததால், ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்டின் விசாரணை அதிகாரியும், மாவட்ட வழக்கறிஞர் ஒருவரும் இணைந்து அந்த நாயை தேடி பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தனர்.

தீவிர முயற்சிக்கு பிறகு அந்த லாப்ரடார் நாயை அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதியில் கண்டறிந்தனர்.

"தாழ்வாரத்தின் கீழே அமர்ந்துகொண்டு அது நீர் பருகிக்கொண்டிருந்ததை பார்த்துடன், அதோடு நாங்கள் செல்லமாக விளையாடினோம். அது அருமையான உணர்வை தந்தது" என்று அரசுசாரா சட்ட அமைப்பை சேர்ந்த தன்னார்வலரான லிசா கிறிஸ்டோன் கூறுகிறார்.

அந்த நாயின் தனித்துவமான தோற்றம், மற்ற ஆதாரங்களை வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நாய்தான் இது என்பது உறுதிசெய்யப்பட்டது.

"லூசி என்றழைக்கப்பட்ட அந்த நாய் சுடப்படவில்லை. லூசி உயிருடன் நல்ல நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"எங்களது விசாரணை அதிகாரியும், ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்டை சேர்ந்த விசாரணை அதிகாரியும் சேர்ந்து லூசி என்ற அந்த நாயை கண்டறிந்ததோடு, அதன் அடையாளத்தை உறுதிசெய்து, நேரம் செலவிட்டதுடன், அதோடு புகைப்படமும் எடுத்தோம்."

மேற்குறிப்பிட்ட வாதங்களை கேட்ட ஓரிகான் மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் ஹார்னெரை விடுதலை செய்ததுடன், மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டது.

இந்த வழக்கை தொடர்ந்த பெண்ணுடன் பேச முயற்சித்தபோது, அவர் சந்திக்க மறுத்ததுடன், மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் ஊழியர் அவரை தொடர்புகொண்டபோது அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான மறுவிசாரணை ரத்து செய்யப்பட்டதோடு ஹார்னெர் தனது மனைவியுடன் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து தான் விடுவிக்கப்படுவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றியை உரிதாக்கிக்கொள்வதாகவும், இனி தானும் தனது மனைவியும் சேர்ந்து இயல்பான வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் ஹார்னெர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :