You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எகிப்து: போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் 2013ஆம் ஆண்டு அதிபராக இருந்த மொஹமத் மொர்ஸி நீக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் மீதான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
75 பேருக்கு மரண தண்டனையும் 47 பேருக்கு ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு 'அநியாயமானது' என்று கூறியுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு , எகிப்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளது.
கெய்ரோவின் ரப்பா அல்-அடவியா சதுக்கத்தில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பாதுகாப்பு படையினரால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தற்போது நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும், வன்முறை தூண்டுதல், கொலை, சட்டவிரோத போராட்டங்கள் நடத்தியது ஆகியவற்றிற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
75 பேருக்கான மரண தண்டனையானது கடந்த ஜூலை மாதம் விதிக்கப்பட்டு, தற்போது அது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த வழக்குகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்பின் தலைவரான மொஹமத் படியும் ஒருவர்.
மேலும், பத்திரிகை ஒன்றின் விருது பெற்ற புகைப்படக் கலைஞரான மஹ்மூத் செய்துக்கும் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கலைந்து கொண்டிருக்கும்போது புகைப்படம் எடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே வழக்கு விசாரணையில் இருந்தபோது 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார் என்பதால், இவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொர்ஸிக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
வலதுசாரி குழுக்கள் இதனை விமர்சித்துள்ள நிலையில், எகிப்திய பாதுகாப்பு படையினரால் குறைந்தது 817 பேர் கொலை செய்யப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் என்று மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் பல போராட்டக்காரர்கள் ஆயுதம் ஏந்தி இருந்ததாகவும், 43 போலீஸார் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அப்போதில் இருந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு "தீவிரவாத அமைப்பாக" அறிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்