You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப்பார்வை: ஒரே புதைகுழியில் கிடைத்த 166 மண்டை ஓடுகள்
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ஒரே இடத்தில் 166 மண்டை ஓடுகள்
மெக்சிகோவின் வெராகிரஸ் மாகாணத்தில் ஒரே இடத்தில் குறைந்தது 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடம் எது என்று தெரிவிக்கப்படவில்லை.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களால் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கான இடமாக வெராகிரஸ் மாகாணத்தை பயன்படுத்துவது வழக்கம்.
மார்ச் 2017இல் அங்கு ஓரிடத்தில் சுமார் 250 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அமெரிக்கா: செல்ஃபி எடுக்க முயன்றவர் பலி
அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசியப் பூங்காவில் 820 அடி உயரமுள்ள குன்றின் முகட்டில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
டோமர் ஃபிராங்பர்ட்டார் எனும் அந்த 18 வயது இளைஞர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். இரண்டு மாத சுற்றுலாவுக்கு அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.
வடகொரிய நபர் மீது அமெரிக்கா வழக்கு
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை இணையதளத்தை முடக்கும் நோக்கில் மென்பொருள் தயாரித்ததாக வடகொரிய நபர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பார்க் ஜின் ஹியோக் எனும் அந்த நபர் தற்போது வடகொரியாவில் வசித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராக்: ஊழலுக்கு எதிராகப் போராட்டம்
ஊழல் மற்றும் அரசின் சேவைகள் முறையாக கிடைக்காததால் இராக்கின் பெசாரஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு வாரமாக நடக்கும் இந்தப் போராட்டத்தில், சென்ற வாரம் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்