You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி: ‘பெண் செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி’
ஒரு பெண் செயற்பாட்டாளர் உள்பட ஐந்து செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சௌதி அரேபிய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், பயங்கரவாத வழக்குகளுக்கான தீர்ப்பாயம் ஒன்றில், இந்த செயற்பாட்டாளர்கள் பதற்றம் நிறைந்த குவாட்டிப் பிராந்தியத்தில் "போராட்டங்களில் பங்கேற்றது" உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் சிறுபான்மை சமூகத்தினரான ஷியா முஸ்லிம்களால் அந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சௌதி அரேபியாவில் உரிமைகள் தொடர்பாக போராடி மரண தண்டனை பெறும் முதல் பெண்ணாக இஸ்ரா இருப்பார் என்று நம்பப்படுகிறது.
சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, "பொதுவெளியில் வராத மற்ற பெண் செயற்பாட்டாளர்களுக்கு இது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கும்" என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு எச்சரித்துள்ளது.
தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி கடந்த மே மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து குறைந்தது 13 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், மற்றவர்கள் எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குவாட்டிப் பிராந்தியத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பெரியளவிலான போராட்டங்களில் பங்கேற்றதோடு, அவற்றை ஆவணப்படுத்தியவராக இஸ்ரா அறியப்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.
ஷியா முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த மக்கள், சுன்னி முஸ்லீம்களால் நடத்தப்படும் அரசாங்கத்தால் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதை குற்றஞ்சாட்டுவதற்காக போராட்டக்களத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பெண் செயற்பாட்டாளர் இஸ்ராவும், அவரது கணவரும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து அல்-மபாஹித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரா மற்றும் மற்ற நான்கு செயற்பாட்டாளர்கள் மீது "குவாட்டிப் பிராந்தியத்தில் போராட்டத்தில் பங்கேற்றது", "போராடுவதற்கு தூண்டியது", "ஆட்சிக்கு விரோதமான கோஷங்களை எழுப்பியது", "பொது மக்கள் கருத்தை வலுக்க வைப்பதற்கு முயற்சித்தது", "போராட்டங்களை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டது" மற்றும் "கலகக்காரர்களுக்கு தார்மீக ஆதரவு அளித்தது" உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வழக்கறிஞரால் விசாரணையின்போது சுமத்தப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.
இஸ்லாமிய சட்ட கொள்கையான "டசிர்" (நீதிபதி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம்) படி ஐந்து செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று விசாரணையின் தொடக்கத்தில் வழக்கறிஞர் நீதிபதியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
"எந்த வகையான மரண தண்டனையும் அதிர்ச்சி தரும் ஒன்றுதான், ஆனால் எவ்விதமான வன்முறை நடத்தை சார்ந்த குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத இஸ்ரா போன்ற செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க முயல்வது பயங்கரமானது" என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குனர் சாரா லேஹ் விட்சன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரா தொடர்பான வழக்கு விசாரணை குறித்து சௌதி அரேபிய அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இதற்கு முன்பு பல ஷியா முஸ்லீம் செயற்பாட்டாளர்களுக்கு சௌதி அரேபிய நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்கியுள்ளன. இதை அரசியல் நோக்கமுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் மீது தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும், அரசாங்கத்திற்கெதிராக செயல்பட்டது மற்றும் ராணுவத்தினரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :