இறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் - நெகிழ்ச்சி சம்பவம்

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

இறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம்

இறந்த தன் குட்டியை பதினேழு நாட்களாக சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தம் இறந்த குட்டியை தூக்கி திரியும். ஆனால், இந்த திமிங்கலமானது புதிய சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். ஜூலை 24 அந்த திமிங்கல குட்டியானது மரணத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

நீர்யானை தாக்குதல்

நீர்யானையை புகைப்படம் எடுக்க முயன்ற சீனர் ஒருவர் அந்த நீர்யானை கடித்ததில் பலியானார். இந்த சம்பவமானது கென்யாவில் உள்ள நைவஷா ஏரி அருகே நிகழ்ந்துள்ளது. பலியான சீனரின் பெயர் சங் மிங் சாங். இன்னொரு சீனர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் நீர்யானை தாக்கியதில் அந்தப் பகுதியில் ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

காஸ்பியன் ஒப்பந்தம்

காஸ்பியன் கடல் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றில் ரஷ்யா, இரான், அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் துர்கமனிஸ்தான் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. காஸ்பியன் கடல் வளத்தை பகிர்ந்து கொள்வது குறித்தும், அங்கு இந்த ஐந்து நாடுகளும் ராணுவ துருப்புகளை நிறுத்துவது குறித்தும் இந்த ஒப்பந்தம் மூலம் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

சரியும் மதிப்பு

ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிவை கண்டு உள்ளதை அடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி உறுதியளித்துள்ளது. நடவடிக்கைகளின் விவரம் குறித்து சிறிது காலத்தில் அறிவிக்கப்படும் என நாட்டின் நிதியமைச்சர் ’ஹரியட்’ செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார். திங்கள் காலை முதல் "நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம், சந்தையில் அது குறித்து அறிவிக்கப்படும்" என்று பேரட் அல்பய்ராக் தெரிவித்தார். வெள்ளியன்று டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு 20 சதவீதம் குறைந்தது. கடந்த வருடம் ஏற்கனவே அது 40 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.

எதிர் போராட்டம்

ஓராண்டுக்கு முன் வெர்ஜினியாவில் பேரணியில் வெடித்த வன்முறையை நினைவுக்கூரும் விதமாக ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் வெறும் 20 வலதுசாரிகள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். ஆனால், இதற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டனர். இரு தரப்புக்கும் சச்சரவு வரக் கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :