இந்தோனீஷியா: பூமியின் 10 கி.மீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம்
இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏழு எனும் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உண்டானதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும் சில மணி நேரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.
பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், அந்தத் தீவின் வடக்கு கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யு.எஸ் ஜியாலஜிக்கல் சர்வே கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த செய்திகள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், கடலில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள எரிமலை அருகே வசிக்கும் மக்களும் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு அதிகமான எண்ணிக்கையில் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அத்தீவில் இயங்கி வரும் விமான நிலையத்துக்கு எந்த சேதமும் உண்டாகவில்லை எனவும், அது வழக்கமாக இயங்கி வருவதாகவும் அவ்விமான நிலையத்தை இயக்கி வரும் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள பாலி தீவிலும் சில நொடிகள் உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டடங்களுக்குள் இருந்த மக்கள் உடனடியாக வெளியேறினார்கள்.

தான் தங்கியிருந்த விடுதியில் இருந்த அனைவரும் வெளியேறி ஓடியதால், தாமும் வெளியேறியதாக மிஷெல் லிண்ட்சே எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
லோம்போக் தீவில் கடந்த வாரம் உண்டான நிலநடுக்கத்தால் உண்டான மலைச்சரிவில் ரிஞ்சனி மலையில் மலையேறச் சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் மலையிலேயே சிக்கிக்கொண்டனர்.
அவர்களில் சிலர் தரை மார்க்கமாகவும், சிலர் ஹெலிகாப்டர் உதவியுடனும் மீட்கப்பட்டனர். அந்த நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












