You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: செல்வாக்கு மிக்க சீனத் துறவி மீது புகார்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: குற்றச்சாட்டில் சீனத் துறவி
பெண் துறவிகளின் மனங்களை மயக்கி, தொந்தரவு கொடுத்து அவர்களை உடலுறவு கொள்ள செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அதிகாரம் மிக்க சீனத் துறவி ஒருவர் மறுத்துள்ளார்.
இந்த துறவி தங்கியிருக்கும் லொங்சுவான் கோயிலில் இருந்து 2 துறவிகள் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மடாதிபதி சுயேசொங்கின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
உண்மைகளை திரித்து கூறுவதாக தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள கோயில் இந்த 2 துறவிகளையும் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் அதிகரித்து வரும் "#MeToo" இயக்கத்தின் ஒரு பகுதியாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சமீபத்திய பிரபலமான நபர் மடாதிபதி சுயேசொங் ஆவார்.
சீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலுள்ள இவர், இந்தப் பொறுப்பை வகிக்கும் இளைய துறவியாவார். அரசுக்கு அரசியல் ஆலோசகராகவும் இவர் இருந்து வருகிறார்.
சீன சமூக வலைதளமான "வெய்போ"-வில் பல லட்சக்கணக்கானோர் இவரை பின்தொடருகின்றனர்.
இது தொடர்பாக புலனாய்வு குழு ஒன்றை அமைக்கப்போவதாக "வெய்போ" சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது, ஆனால், சுயேசொங் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதை குறிப்பிட்டு காட்டியுள்ளது.
புனையப்பட்ட சான்றால், மடாதிபதி சுயேசொங்கை மோசமாக சித்தரிக்கும் நோக்கம் இதில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள முதல் பொது நிறுவனமாக மாறிய ஆப்பிள்
ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள முதல் பொது நிறுவனமாக ஆப்பிள் மாறியுள்ளது.
வியாழக்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் பங்குச்சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை எட்டியதோடு, அதனுடைய பங்குகள் புதிய வரலாற்றுப் பதிவாக 207.39 டாலராகியது.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபத்தை அறிக்கையிட்ட செவ்வாய்கிழமையில் இருந்து அதனுடைய பங்குகளின் மதிப்பு அதிகரித்து வந்த்து.
அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற சிலிக்கான் வேலியின் போட்டியாளர்களை முந்திச் சென்று, ஆப்பிள் ஒரு டிரில்லியன் மதிப்பை பெறுகின்ற முதல் நிறுவனமாகியுள்ளது.
உறைபனி வானிலையில் மலையில் 7 நாட்கள் சிக்கியவர் உயிர்தப்பிய அதிசயம்
நியூசிலாந்து மலையில் உறைபனி வானிலையில் ஏறக்குறைய 7 நாட்கள் சிக்கி, உயிர் பிழைத்துள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேறுபவர் ஒருவர், உயிரோடு இருக்க ராணுவ பயிற்சியை பயன்படுத்தியிருக்கலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
வனாகாவுக்கு அருகிலுள்ள ஆஸ்பிரிங் மலையில் தனிநபராக மலையேறிய இவர் திரும்பி வரவில்லை என்பதால், 29 வயதான இந்த மனிதரை திங்கள்கிழமையில் இருந்து காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை அவரை கண்டுபிடித்த மீட்புக்குழு, அவர் எழுந்து நின்று, ஹெலிகாப்டரை நோக்கி கையசைக்க முடிந்ததை அசாதாரணமானது என்று கூறியுள்ளது.
மணிக்கு 60 மைல் வேகத்தில் அடித்த குளிர் காற்று மற்றும் கடும் பனிப்பொழிவில் சிக்கிய இந்த நபர் உயிர்தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலைப் பாதுகாப்பு கோரி டாக்காவை முடக்கிய வங்க தேசப் பதின் வயதினர்
மிக வேகமாக சென்ற பேருந்தால் பதின் வயதினர் 2 பேர் கொல்லப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான வங்க தேச பள்ளி மாணவர்கள் 5வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டியும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோரி, தலைநகர் டாக்காவின் செயல்பாடுகளை இவர்கள் முடங்க செய்துள்ளனர்.
இந்த மாணவர்கள் வெளிவேடம் போடுவதாக ஓர் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளது மேலும் கோபத்தை மூட்டியுள்ளது.
நாடு முழுவதுமுள்ள உயர்நிலை பள்ளிகளை மூடியுள்ள கல்வி அமைச்சகம், மாணவர்களின் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
ஆனாலும், போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை.
பிற செய்திகள்:
- மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா? ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
- கொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்திரேலிய நகரம்
- வீட்டிலேயே சுகப்பிரசவ விளம்பரம்: ஹீலர் பாஸ்கர் கைது
- கருணாநிதி ஒரு பிறவிப் போராளி - கேரள முதல்வர் பினராயி விஜயன்
- 8 வழி சாலைக்கு எதிரான நடை பயணத்துக்கு தடை: கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்