You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க குடியேற்றம்: இன்னும் பெற்றோரோடு சேர்க்கப்படாத 711 குழந்தைகள்
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சட்ட விரோதமாக குடியேறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 711 குழந்தைகள், நீதிமன்ற காலக்கெடு முடிந்த பின்னரும் இன்னும் பெற்றோரோடு சேர்த்து வைக்கப்படவில்லை.
பெற்றோரோடு மீண்டும் சேர்த்து வைக்கப்பட இந்த குழந்தைகள் தகுதியில்லாதவர்களாக இருப்பதாக அமெரிக்க அரசு வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப உறுவுகள் உறுதி செய்யப்படாமல் இருப்பது, பெற்றோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது அல்லது தொற்றக்கூடிய நோயாளியாக அவர்கள் இருப்பது ஆகியவை இதற்கு காரணங்களாக காட்டப்பட்டுள்ளன.
431 பேரது வழக்கில் பெற்றோர் அமெரிக்காவில் இல்லை என்று நீதிமன்றத்தில் தக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தாங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த மாதம் சான் டியாகோ ஃபெடரல் நீதிபதியான டானா சாப்ராவ் வழங்கிய தீர்ப்பில், குடியேறிகள் விவகாரம் தொடர்பாக டிராப் நிர்வாகம் இயற்றிய கொள்கையின்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட சிறார்கள் ஜுலை 26-ஆம் தேதிக்குள் அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டிட்டிருந்தார்.
ஆவணங்கள் ஏதுமில்லாமல் அமெரிக்கா வந்த பெற்றோர்களிடம் இருந்து 2500 குழந்தைகள் அந்நாட்டு அதிகாரிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இது அப்போது உலக அளவில் மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.
மெக்சிகோ மற்றும் அமெரிக்கா எல்லை மூலமாக தங்கள் நாட்டுக்குள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளை நாட்டில் அனுமதிக்கப்போவதில்லை என்பதில் அமெரிக்கா அரசு உறுதியாக உள்ளது.
இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்பதை தெளிவுபடுத்தி கொள்கை ஒன்றையும் அந்நாட்டு அரசு வகுத்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிப்பதற்கு வழிவகை செய்த, அமெரிக்காவின் குடியேறிகள் கொள்கையை மாற்றியமைத்த அதிபர் டிரம்பிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து தரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, தன் கொள்கையை டிரம்ப் திரும்பப் பெற்றார்.
குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டது தொடர்பாக எழுந்த கண்டங்களுக்கு பதிலளித்த டிரம்ப், ''பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை'' என்று அப்போது குறிப்பிட்டார்.
ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :