You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா தலையிடுகிறதா? 'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகை
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
ரஷ்யா தலையிடுகிறதா?'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகை
அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையீடு பற்றிய கேள்வி, தொடர்ந்து மூன்றாவது நாளாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சங்கடத்தைத் தருவதுடன் அமெரிக்க அரசியலையும் உலுக்குகிறது.
திங்கள்கிழமை புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்குக் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறியது சர்ச்சைக்குள்ளானது. அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மறுநாளே தாம் சொல்லவந்தது அதுவல்ல என்றும், ரஷ்யா தலையிட்டிருக்காது என்று சொல்ல ஒரு காரணமும் இல்லை என்று கூற விரும்பியதாகவும், ஒரு வார்த்தை மாறிவிட்டதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், "இன்னமும் அமெரிக்கத் தேர்தல்களை ரஷ்யா குறிவைக்கிறதா?" என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மறுத்துத் தலையை அசைத்த டிரம்ப் "தேங்க்யூ வெரி மச், நோ" என்று தெரிவித்தார். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா என்று செய்தியாளர் மீண்டும் கேட்டதற்கு அவர் மீண்டும் இல்லை என்று சொன்னதாகத் தெரிந்தது.
ஆனால், பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், "அது மேலும் கேள்விகள் வேண்டாம் என்று சொல்வதற்காக சொல்லப்பட்ட 'நோ' என்றும், ரஷ்யா கடந்த காலத்தில் செய்ததைப் போல மீண்டும் அமெரிக்கத் தேர்தலில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள தீவிர நடவடிக்கைகளை அதிபரும், நிர்வாகமும் எடுத்துவருவதாகவும்" தெரிவித்தார்.
எத்தியோப்பியா - எரித்திரியா இடையே 20 ஆண்டுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடக்கம்
எத்தியோப்பியா, எரித்திரியா இடையிலான விமானப் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
1998-2000 காலகட்டத்தில் நடைபெற்ற எல்லைப்போர்க் காலத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையேயான சாலை மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
"பாலுறவு தந்து வேலைக்கு முயன்ற" ரஷ்ய உளவாளி
ரஷ்யாவின் உளவாளியாக கருதப்படும் பெண்ணொருவர், தான் இலக்கு வைத்த சிறப்பு ஆர்வ நிறுவனம் ஒன்றில் வேலைபெறுவதற்தாக பெயர் குறிப்பிடாத நபர் ஒருவருடன் உடலுறவு கொள்ள முன்வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் கைது செய்யப்பட்ட மரியா புட்டினா என்ற அந்த பெண் குடியரசு கட்சியினருடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்ததுடன், துப்பாக்கி சார்ந்த உரிமைகளுக்கான ஆதரவாளராக செயல்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்வீடனில் கடும் காட்டுத்தீ
ஸ்வீடனின் வடக்குப்பகுதியில் உருவான காட்டுத் தீ ஆர்டிக் வட்டத்தை நோக்கி பரவி செல்வதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிகாரிகள் சர்வதேச உதவியை கோரியுள்ளனர்.
ஸ்வீடன் முழுவதும் நிலவும் கடும் வெப்பநிலை, தொடர் வறட்சி ஆகியவை காட்டுத்தீக்கான முதன்மை காரணிகளாக உள்ள நிலையில், தற்போது கிட்டதட்ட ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீ பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :