You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்கொரிய கலாசார விழாவில் இட்லி, சாம்பார் சாப்பிட்ட வெளிநாட்டினர்
தென்கொரியாவின் சுவோன் நகரில் நடந்த பன்னாட்டு கலாசார விழாவில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், கலாசார உடை மற்றும் கைவினை பொருட்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், தென் கொரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்றனர். குறிப்பாக இந்தியா, வங்கதேசம், ரஷ்யா, மங்கோலியா, , ஜப்பான்,வியட்நாம்,நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், கலாசார உடைகள், கைவினை பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு புறம் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் அனைத்து நாட்டுக் கலாசார நடனம், பாடல்கள், கச்சேரி எனக் களைகட்டியது. ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய நடனங்களை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த விழா குறித்து தமிழகத்தைச் சேர்ந்தவரும், விழாவில் இந்திய உணவு விற்பனை செய்த சரவணன், "இந்தப் பன்னாட்டு கலாச்சார விழாவை கொரியாவில் ஐ.ஐ.கே ( IIK - Indian In Korea) என்றழைக்கப்படும். நான் என் மனைவி மற்றும் நண்பர்கள் இணைந்து தமிழ்நாட்டு உணவு வகைகளான மெதுவடை, பருப்பு வடை, தயிர் வடை, இட்லி , சாம்பார், சட்னி வகைகள் எனச் சமைத்து இங்கே விற்பனை செய்தோம். மற்ற நாட்டைச் சேர்ந்த பலரும் அதை ஆர்வமுடன் வாங்கி உண்டனர்.'' என்கிறார் அவர்
மேலும் உணவு கூடாரத்திற்கு அருகிலேயே தமிழக பெண்கள் அணியும் காதணிகள், வளையல்கள் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் தொடர்ந்த சரவணன் "பிறநாட்டவர்கள் உணவு வகை கலாசாரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த விழாவில் சிலவற்றை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்திய கலாசார உடையைக் காண்பிக்கும் வகையில் என் இரண்டு மகள்களும் என் நண்பரின் மகள்களும் இணைந்து நம் தமிழக பாரம்பரிய உடையில் விழா மேடை ஏறி வணக்கம் தெரிவித்தனர். இந்த விழாவில் கலந்துகொண்டது எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம். எந்த 'விசா'வும் எடுக்காமல் முப்பது நாடுகளைச் செலவில்லாமல் சுற்றிவந்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்'' என்று நகைப்புடன் கூறினார்.
இந்தவிழாவில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் கூறுகையில். " நான் பெரும்பாலும் ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய நடனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். இன்றுதான் என்னால் நேரில் காண முடிந்தது. ஜப்பான், வியட்நாம்,நேபாளம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் உணவு வகைகள் பார்க்கையில் எனக்குப் பிரமிப்பாக இருந்தது'' என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்