உலகப் பார்வை: 'சட்டவிரோதமாக' நடந்து கொண்டதாக டிரம்ப் அறக்கட்டளை மீது வழக்கு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அதிபர் டிரம்ப் மீது வழக்கு

தொடர்ச்சியாக "சட்டவிரோதமாக" நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மகள், மகன்கள் மற்றும் டிரம்ப் அறக்கட்டளை மீது நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் வழக்கு தொடர்ந்துள்ளார்

2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், டிரம்ப் அறக்கட்டளை அமைப்பானது "சட்டவிரோத அரசியல் ஒருங்கிணைப்பில்" ஈடுபட்டதாக பார்பரா அன்டர்வுட் கூறியுள்ளார்.

அறக்கட்டளையை கலைத்து, 2.8 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அறக்கட்டளை, இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளது.

ஏமனில் தொடரும் பதற்றம்

ஏமனில் சௌதி அரேபியா தலைமையிலான அரசு ஆதரவு படைகள், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கிய ஹூடேடா துறைமுகத்தில் தாக்குதல் நடத்தியதில் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என்று உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதில் 30 ஹூதி கிளர்ச்சியாளர்களும், அரசு ஆதரவு படைகளை சேர்ந்த 9 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அங்குள்ள பொதுமக்கள் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மெர்கல் கூட்டணிக்கு அச்சுறுத்தல்

குடியேறிகள் தொடர்பான கொள்கைகளில் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மற்றும் அவரது உள்துறை அமைச்சருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது மெர்கலின் கூட்டணி ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கிறிஸ்துவ சமூக யூனியன் கட்சியை சேர்ந்த ஹோஸ்ட் சேஹோஃபர், எல்லையில் ஆவணங்கள் இல்லாமல் வரும் குடியேறுபவர்களை திருப்பி அனுப்பும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார். இது குறித்து கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மெர்கல் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

குடியேறுபவர்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அளவில் புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று மெர்கல் நினைக்கிறார். 2015ஆம் ஆண்டில் 1 மில்லியன் மக்களை ஜெர்மனிக்குள் அனுமதித்ததற்கு கடும் விமர்சனத்திற்கு அவர் உள்ளானார்.

வன்முறையாக மாறிய தேர்தல் பிரச்சாரம்

தென் துருக்கியில் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம், வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :