You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவில் சட்டமன்ற உறுப்பினரான இந்திய டாக்டர்
- எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
- பதவி, பிபிசி நிருபர், மாஸ்கோவில் இருந்து
ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற கதை உங்களுக்குத் தெரியுமா?
பீகார் மாநிலம் பட்னாவை சேர்ந்த அபய் குமார் சிங், குர்ஸ்க் எனும் ரஷ்ய மாகாணத்தில் ரஷ்ய அதிபர் புதினின் கட்சியின் 'டெப்யூடட்' (deputat) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் டெப்யூடட் என்ற பதவி, இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவிக்கு சமமானது.
இந்திய ஊடகங்களில் முதன்முறையாக
அபய் குமார் சிங் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 'யுனைடட் ரஷ்யா' கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
"அதிபர் புதினால் மிகவும் கவரப்பட்ட நான் அரசியலில் நுழைய முடிவெடுத்தேன்" என்று சொல்கிறார் பாட்னாவில் பிறந்த அபய் சிங். சரி, பிரபலமான அரசியல் தலைவரால் ஈர்க்கப்படுவதோ அல்லது அரசியலில் இறங்க முடிவு செய்வதோ இயல்பானது. ஆனால் அதில் ஜெயித்தது எப்படி?
"இந்திய அல்லது சர்வதேச ஊடகம் ஒன்றில் முதன்முறையாக எனது பேட்டி வெளியாகிறது, அதுவும் பிபிசியில் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று மாஸ்கோவில் பேட்டி கண்டபோது அபய் தெரிவித்தார்.
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்ற (தூமா) தேர்தலில் ஆளும் கட்சியான யுனைடட் ரஷ்யா 75 சதவிகித இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த 18 ஆண்டுகளாக யுனைடட் ரஷ்யா ஆளும் கட்சியாக உள்ளது.
2018 தேர்தலில் புதின் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றாலும், கட்சியின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது.
இந்த தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு 2017 அக்டோபரில் நடைபெற்ற குர்ஸ்க் சட்டமன்றத் தேர்தலில் விளாடிமிர் புதினின் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய அபய் வெற்றி பெற்றார்.
பீகாருடன் தொடரும் உறவு
"பாட்னாவில் பிறந்த நான் லொயோலா பள்ளியில் படித்தேன். 1991ஆம் ஆண்டு, நானும், எனது நண்பர்கள் சிலரும் மருத்துவ கல்வி படிப்பதற்காக ரஷ்யா சென்றோம்" என்று மாணவராக ரஷ்யா சென்ற தனது கதையை அபய் கூறினார்.
கடினமாக உழைத்து படிப்பை முடித்த அபய் பாட்னாவுக்கு திரும்பி, மருத்துவராக பதிவு செய்து கொண்டார்.
தனது தனிப்பட்ட அல்லது குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேச அபய் விரும்பவில்லை, ஆனால் தாயகத்துடனும், பீகாருடனான உறவு தொடர்வதாக அவர் கூறுகிறார்.
"ஆனால் என்னுடைய வாழ்க்கை ரஷ்யாவில்தான் என்று கடவுள் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. மீண்டும் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு வந்தேன். இங்கு நண்பர்கள் சிலருடன் இணைந்து மருந்துத் தொழிலில் ஈடுபட்டேன்."
ரஷ்யாவில் தொழில் தொடங்கியது எப்படி?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் அபய் தனது பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார். "ஆரம்பத்தில் இங்கு தொழில் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்தியாவில் பிற்ந்த நான் சிவப்புத் தோலை கொண்டிருக்கவில்லை. தோலின் நிறத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகம் என்பது எனக்கு தெரியும். நான் ஏற்கனவே பல ஆண்டுகள் ரஷ்யாவில் கல்விக்காக வசித்திருக்கிறேன். ஆனால், கடின உழைப்பு முயற்சியை திருவினையாக்கும் என்பதை நிரூபித்தோம்" என்கிறார்.
சிறிது சிறிதாக ரஷ்யாவில் காலூன்றிய அபய், பிறகு, வேறு தொழில்களிலும் தடம் பதித்தார். மருந்துத் தொழிலில் சிறப்பாக செயல்பட்ட அவர், ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டார். தற்போது அவர் சில ஷாப்பிங் மால்களின் அதிபதி.
ரஷ்ய அதிபர் புதினால் ஈர்க்கப்பட்ட அவர், ரஷ்யாவின் தொழிலதிபர் என்ற நிலையில் இருந்து அரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்.
பாட்னாவில் இருக்கும் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பதற்காக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பீகாருக்கு வருகிறார் அபய் குமார் சிங்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்