"காஷ்மீர் பிரச்சனையில் ஷுஜாத் புகாரியின் பங்களிப்பு என்ன?" ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் கருத்து

    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

காஷ்மீரில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி துணிச்சல் மிக்க பத்திரிகையாளர், மக்களை உண்மையாக நேசித்தவர், அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர் என்று குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரும் 'ஃப்ரண்ட் லைன்' இதழின் ஆசிரியருமான ஆர்.விஜயசங்கர்.

ஷுஜாத் புகாரி தமது நண்பர் என்று குறிப்பிடும் விஜயசங்கர், புகாரியின் மரணத்தை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

"காஷ்மீர் போன்ற இடத்தில் ஒரு அரசியல் பத்திரிகையை நடத்துவது என்பது மிகக் கடினமானது. அவரது 'ரைசி்ங் காஷ்மீர்' பத்திரிகை, பெயரே சுட்டுவது போல ஓர் அரசியல் பத்திரிகை. அதிலும் அவர், அச்சமின்றி களத்தில் இருக்கும் உண்மைகளை, சரியெனப் படும் கருத்துகளை எழுதக்கூடியவர். பிரச்சினையில் தொடர்புடைய பல தரப்பினரின் கருத்துகளையும் நடுவுநிலை தவறாமல் இணைத்து செய்தியை வழங்கக்கூடியவர்".

காஷ்மீரின் கள நிலவரம் குறித்த செய்திகளை தெளிவோடும், வரலாற்றுப் பார்வையோடும் வழங்கியது அவரது பங்களிப்பு என்று குறிப்பிட்டார் விஜயசங்கர்,

"மத்திய அரசு காஷ்மீர் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டு காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்துவதாகவும், அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதாகவும், எல்லைக்கு அப்பால் இருந்து அல்லாமல் காஷ்மீரிலேயே தீவிரவாதம் தோன்றுவதற்கு அரசின் அணுகுமுறை காரணமாக இருந்ததாகவும் ஷுஜாத் கருதினார்."

வெறும் பத்திரிகையாளராக மட்டும் இல்லாமல் தேவையான நேரங்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவிகளும் செய்துவந்தார் ஷுஜாத் என்று குறிப்பிட்ட விஜயசங்கர், 2000-ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்குப் பிறகும் அவர் ஸ்ரீநகரிலேயே குடியிருந்தார் என்றும், எப்போதும் உற்சாகமாகப் பணியாற்றக்கூடியவர், நேர்மறையான அணுகுமுறை உடையவர் என்றும் குறிப்பிட்டார். "தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத துணிச்சல் மிக்கவர் அவர்," என்று அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரங்கள் குறித்து ஃப்ரண்ட் லைனில் கட்டுரைகள் எழுதிவந்தார் ஷுஜாத்.

ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் பத்திரிகை பயிற்சிப் பள்ளியில் உரையாற்றுவதற்காக கடந்த மூன்றாண்டுகளாக ஆண்டுக்கொரு முறை குடும்பத்தோடு சென்னை வந்திருந்த புகாரியோடு நெருங்கிப் பழகிய நாட்களை நினைவு கூர்ந்தார் விஜயசங்கர்.

ஃப்ரண்ட் லைனின் கடந்த இதழுக்கு ஒரு கட்டுரை எழுத வேண்டி அவரைத் தொடர்பு கொள்ள நினைத்ததாகவும், ஆனால், தொடர்புகொள்ள முடியாமல் போனதாகவும் குறிப்பிட்ட விஜயசங்கர், ஒருவேளை நினைத்தபடி அழைத்திருந்தால் கடைசியாக அவரது உற்சாகமான குரலைக் கேட்டிருக்க முடியும் என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :