You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெற்றிகரமாக நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பு: பின்னணியில் தமிழர்
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி, சிங்கப்பூரிலிருந்து
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டிரம்பை சிங்கப்பூரில் முதல் முறையாகச் சந்தித்தார். சீனாவுக்குப் பிறகு, வட கொரிய தலைவரின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் சிங்கப்பூராகும். இந்த பயணத்திற்கு கிம் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டினார்.
கிம்- டிரம்ப் உச்சிமாநாட்டில் இந்தியாவிற்கு நேரடியாக எந்த பங்கும் இல்லை என்றாலும், இரு தலைவர்களுக்கு விருந்தோம்பல் செய்ததிலும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததிலும் இந்தியாவிற்குச் சிறப்பு தொடர்பு உள்ளது. திங்கட்கிழமை இரவு, சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க சென்ற கிம் உடன், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் உடன் சென்றார். சில நேரம் கழித்து, தங்களது பயண புகைப்படத்தினையும் பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்திய வம்சாவளியான பாலகிருஷ்ணன், சிங்கப்பூரின் முக்கிய அமைச்சராக உள்ளார். கடந்த சில நாட்களில் டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தைச் செலவழித்த ஒரே சிங்கப்பூர் தலைவர் இவரே. இரு நாட்டுத் தலைவர்களின் குழுவை இணைப்பதில், இவர் முக்கிய பங்கு வகித்தார்.
சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தில், டிரம்ப் மற்றும் கிம்மை வரவேற்ற பாலகிருஷ்ணன், பிறகு இரு தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து உச்சிமாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
தற்போது உள்ளூர் ஊடகங்களில் டிரம்ப், கிம்மிற்கு பிறகு பிரபலமான நபராக பாலகிருஷ்ணன் உள்ளார். யார் இவர்?
தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் பாலகிருஷ்ணன்.
''சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகம் மிகவும் வெற்றிகரமானது என்பதை இந்திய வம்சாவளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் இதர அமைச்சர்கள் நிரூபிக்கின்றனர்'' என பாலகிருஷ்ணனை நன்கு அறிந்த திருநாவுக்கரசு கூறுகிறார்.
இந்தியர்களும், சீனர்களும் நெருங்கி பழகலாம் என்பதற்கு பாலகிருஷ்ணனின் பெற்றோர் ஒரு உதாரணம். சிங்கப்பூரில் இந்த இரு சமூகத்தினரிடையே திருமணம் நடந்த பல உதாரணங்கள் உள்ளன. இந்து கோயில்களில் சீனர்கள் வழிபடுவதையும், இந்திய உணவகங்களில் சீனர்கள் சாப்பிடுவதையும் சகஜமாக பார்க்கலாம்.
57 வயதான பாலகிருஷ்ணன், நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த பாலகிருஷ்ணன், விறுவிறுவென வெற்றிப்பாதையில் முன்னேறி 2004-ம் ஆண்டு இணை அமைச்சரானார். விரைவிலே சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சரான இவர், 2015-ம் ஆண்டு சிங்கப்பூரின் வெளியுறத்துறை அமைச்சரானார்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிங்கப்பூர் வந்தபோது, அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பாலகிருஷ்ணன் வெளியுறத்துறை அமைச்சரான பிறகு, இந்தியா- சிங்கப்பூர் உறவுகளைப் பலப்படுத்த பங்களித்திருக்கிறார் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
கண் மருத்துவரான பாலகிருஷ்ணன், லண்டலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார்.
உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட பாலகிருஷ்ணன், உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இரு நாடுகளிடமும் விவரித்தார். திங்கள்கிழமை பாலகிருஷ்ணனை சந்தித்தபோது, மாநாட்டினை ஒருங்கிணைத்ததற்காக வட கொரிய தலைவர் கிம் நன்றி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்