ஸ்பெயினின் புதிய பிரதமரானார் சோஷியலிச கட்சியின் பெட்ரோ சன்செத்

பட மூலாதாரம், EPA
ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக சோஷியலிச கட்சியின் பெட்ரோ சன்செத் பதவியேற்றுள்ளார். பழமைவாத கட்சியின் மரியானோ ரசொய் நீக்கம் செய்யபட்ட நிலையில் பெட்ரோவுக்கு, அரசர் ஃபெல்லீப்பெ பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாத்திகவாதியான சன்செத், பைபிள் அல்லது சிலுவை ஏதும் இல்லாமல் பதவியேற்றுக் கொண்ட அவர், அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஸ்பெயினின் நவீன வரலாற்றில் இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
பாராளுமன்ற காலப்பகுதியில் மீதமுள்ள 2 ஆண்டுகளை புதிய பிரதமரான சன்செத் பார்த்துக் கொள்வார்.
மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ரசொயை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஏதுவாக, ஆறு பிற கட்சிகளின் ஆதரவை சோஷியலிச கட்சியின் தலைவரான சன்செத் பெற்றார்.

பட மூலாதாரம், AFP
சனிக்கிழமையன்று மேட்ரிட்டில் உள்ள அரச குடியிருப்பு மாளிகையில் பதவியேற்றுக் கொண்ட சன்செத், "மனசாட்சி மற்றும் மரியாதையுடன், கடமைகளை உண்மையாய் நிறைவேற்றுவேன்" என்று உறுதியளித்தார்.
முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதமர் ரசொய் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார் சன்செத்.
ஸ்பெயினின் நவீன வரலாற்றில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் வீழ்த்தப்பட்ட முதல் பிரதமர் ரசொய் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












