You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவை விமர்சிக்கும் சிவசேனா
பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு.
இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக மீது உத்தவ் தாக்கரே விமர்சனம்
எதிர்காலத்தில் பாஜகவுடனான கூட்டணியில் தாங்கள் நீடிக்கப் போவதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, சிவசேனா -பாஜக அரசியல் உறவு குறித்த யூகங்கள் மீண்டும் தோன்றியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தில் இருந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது என்பதை காட்டுவதாக மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்
இலங்கையிலுள்ள யாழ் பொது நூலகம் எரிக்கப்பட் 37 ஆண்டுகள் முடிந்துள்ளன.
இலங்கை இனப்பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நள்ளிரவில் அந்நூலகம் எரிக்கப்பட்டது. அப்போது சுமார் 97,000 நூல்களும், பல பழமையான தமிழ் ஓலைச்சுவடிகளும் தீக்கிரையாகின.
சர்ச்சையை கிளப்பிய நடனம்
தென்னாப்பிரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகள் நிர்வாணமாக பாட்டுப்பாடி நடனமாடியது பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
அது 'கோவ்சா' இனப்பெண்களின் பாரம்பரிய வழக்கம் என்று ஆசிரியர் ஒருவர் கூறியிருந்தாலும், இது குறித்து விசாரிக்கப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு
இந்தியாவின் முக்கிய கோடைக் கால சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, இமாச்சல பிரதேசத் தலைநகர் சிம்லாவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இமய மலையில் அமைந்துள்ள, வென்பனி சூழ்ந்துள்ள இந்த மலை வாசத்தலத்தில் இருக்கும் விடுதி உரிமையாளர்கள் தண்ணீர் இல்லாததால், மேற்கொண்டு இந்தக் கோடைக்காலத்தில் சிம்லா வர வேண்டாம் என்று சிம்லா செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடம் கூறுகின்றனர்.
ரஷ்ய கால்பந்து அணியில் ஊக்கமருந்து பயன்பாடு
இந்த மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ள உலகக்கோப்பை கால்ப்பந்து போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 34 பேர் கொண்ட ரஷ்ய அணியில் இருக்கும் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தி ஏமாற்றுபவர் என்று மாஸ்கோவிலுள்ள ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்தின் முன்னாள் தலைவர் கிரிகோரி ராட்சென்கோவ் பிபிசியிடம் கூறியுள்ளார்.
எனினும், விளையாட்டு வீரர்களின் பெயர் எதையும் அவர் வெளியிடவில்லை.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையை சர்வதேச கால்ப்பந்து சம்மேளனம் கடந்தவாரம் கைவிட்டது.