ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்?
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்?

பட மூலாதாரம், AFP
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக ஹாலிவுட் பிரபலமான ஹார்வே வெயின்ஸ்டீன், நியூயார்க் போலீஸாரிடம் சரணடைய உள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் அவர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக தாம் நடந்து கொள்ளவில்லை என்று ஹார்வே தெரிவித்து வந்தார்.
இதனால், அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலி, பல்ட்ரோ ஆகியோர், ஹார்வே பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அமெரிக்காவுடனான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளத் தயாராகவே உள்ளோம் - வடகொரியா

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டை, அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, வடகொரியா இதற்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையை நடத்த வட கொரிய தலைவர் கிம், பெரும் முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு ஊடகம், அமெரிக்காவுடனான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளத் தாம் இப்போதும் தயாராக இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை ரத்தானதையடுத்து, ஜ.நா சபை செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போல, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

கார் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி
லிபியாவில் உள்ள பெங்ஹாசி நகரத்தில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பெரிய ஹோட்டலுக்கு அருகே இந்த குண்டு வெடித்துள்ளது. ரமலான் மாதம் என்பதால், அந்த இடத்தில் மாலை அதிக மக்கள் திரண்டிருந்தனர்.

''தூத்துக்குடி நிகழ்வு வருத்தம் அளிக்கிறது'' ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், MANJUNATH KIRAN
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துயர்மிகு நிகழ்வுகளை கண்டிருப்பது மிகவும் வருத்தத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரி்வித்துள்ளது.
"எங்களின் நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு, சுற்றியுள்ள சமூக மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எங்கள் நிறுவனம் பணி புரிந்து வருகிறது'' என லண்டனிலிருந்து இயங்கும் வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையானது தற்போது செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதி உத்தரவு பெறுவதற்காக காத்திருக்கும் வேளையில் தங்களுடைய அனைத்து பங்குதாரர்களுடன் திறந்த உரையாடலை ஸ்டெர்லைட் தொடரும்'' என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் இன்று மாநில அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதனால் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரியிலும் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும், அனைத்துக் கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மே 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












