You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு
இந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12) சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடவுள் 2 என்ற படத்தை இயக்கவுள்ள பாரதிராஜா, கடந்த ஜனவரி 2018ல் அந்த படத்தின் தொடக்க விழாவில் பேசியபோது விநாயகர் என்ற கடவுள் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியதாகவும் , அவரது பேச்சு மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் அமைந்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு பதியவேண்டும் என கோரி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
நாராயணனின் மனுவை ஏற்ற நீதிமன்றம், பாரதிராஜா மீது வழக்கு பதிய உத்தரவிட்டதன் பேரில், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பேசியதாக பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலைய அதிகாரிகள் 295(ஏ) மற்றும் 506(ஐ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய உதவி ஆணையர் சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார். ''முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இரு தரப்பினரையும் விசாரிக்கவுள்ளோம்,'' என்று கூறினார்.
1997ல் வெளியான கடவுள் என்ற படத்தின் தொடர்ச்சியாக கடவுள் 2 திரைப்படம் இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். கடவுள் படத்தில், கதாநாயகன் கடவுள் மனிதனாக வாழ்ந்து, மனித வாழ்க்கையின் கஷ்டங்களை உணர்வதாக கதை அமைந்தது. கடவுள் 2 படமும் அதே பாணியில் இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்