You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகையின் வாயை மூட பணம் கொடுக்கப்பட்டது? ரகசியத்தை உடைத்தார் டிரம்பின் சட்ட ஆலோசகர்
தன்னோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வைத்திருந்த உறவை வெளியிடாமல் அமைதியாக இருக்க செய்ய திரைப்பட நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலரை அதிபர் டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தன்னுடைய வழக்கறிஞரிடம் திருப்பி செலுத்திவிட்டார் என்று டிரம்பின் சட்ட ஆலோசகர் ரூடி ஜூலியானே தெரிவித்திருக்கிறார்.
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னால் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஸ்டாமி டேனியல்ஸூக்கு வழங்கிய தொகை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ள டிரம்பின் கூற்றுக்கு முரணாக இந்த தகவல் வந்துள்ளது.
2006ம் ஆண்டு டேனியல்ஸோடு உறவு வைத்து கொண்டதை டிரம்ப் மறுத்துள்ளார்.
தேர்தல் பரப்புரை நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று ஜூலியானே கூறியிருப்பது இந்த விடயத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சட்ட குழுவில் சமீபத்தில் சேர்ந்துள்ள நியூ யார்க் நகர முன்னாள் மேயரான ரூடி ஜூலியானே, ஃபாக்ஸ் நியூஸில் சியன் ஹன்னிட்டியிடம் பேசினார்.
தேர்தல் நிதி பிரச்சனை தொடர்பாக, எந்தவித தவறும் நடைபெறவில்லை என்பதை தெரிவிப்பதுதான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னர் டேனியல்ஸூக்கு கோஹென் வழங்கிய ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் (95 ஆயிரத்து 650 யூரோ) அதிபர் டிரம்பின் தேர்தல் பரப்புரையில் நடைபெற்ற சட்டப்பூர்வமற்ற பண பரிமாற்றமாக எடுத்துக்கொள்ளப்படலாம்.
"இந்தப் பணம் தேர்தல் பரப்புரை பணம் அல்ல. மன்னிக்கவும், நீங்கள் அறியாத உண்மை ஒன்றை உங்களுக்கு தெரிவிக்க இருக்கிறேன். இது பரப்புரை பணம் அல்ல. தேர்தல் பரப்புரை நிதியில் மோசடிகள் எதுவும் நடைபெறவில்லை" என்று ஜூலியானே தெரிவித்தார்.
"ஒரு சட்ட நிறுவனம் வழியாக பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதிபர் அதனை பின்னர் திருப்பி செலுத்தியுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு தெரிந்தவரை இந்த விடயத்திலுள்ள குறிப்பிட்ட விவரங்கள் பற்றி அதிபருக்கு எதுவும் தெரியாது. ஆனால், இது மாதியான விடயங்களை மைக்கேல் பராமரிக்கின்ற பொது ஏற்பாடுகள் பற்றி டிரம்புக்கு தெரியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் நியூ யார்க் டைம்ஸிடம் பேசிய ஜூலியானே, "தேர்தல் பரப்புரைக்கு பின்னர், மாதத்திற்கு 35 ஆயிரம் டாலர் அவருடைய தனிப்பட்ட குடும்ப கணக்கில் இருந்து திருப்பி செலுத்துவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர். செலவுகள் உள்பட 4 லட்சத்து 60 ஆயிரம் டாலர் முதல் 4 லட்சத்து 70 ஆயிரம் வரை இந்த தொகை இருந்தது.
ஃபாக்ஸ் நியுஸில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது டிரம்புக்கு தெரியும் என்றும், பாக்ஸ் நியூஸ் பேட்டிக்கு முன்னரும், பின்னரும் டிரம்புடன் அவர் பேசியுள்ளதாகவும் ஜூலியானே கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்