You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட இந்தியாவில் கடுமையான புயல் தாக்கும் - வானிலை எச்சரிக்கை
வட இந்தியாவில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் பலத்த மழை காரணமாக குறைந்தது 125 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் மோசமான வானிலை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடைகள் பல உயிரிழந்தன.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் சம்பவங்களில், தற்போது அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநிலத்தின் நிவாரண ஆணையர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் பலியானோரின் எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதிக்கு முன் கடுமையான புயல் வீசும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிவாரண ஆணையர் அலுவலகம் ஏ எஃப் பி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று கடுமையான மின்னல் தாக்கியதில் வீடுகள் உடைந்து, அதில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர்.
வட இந்தியாவில் புழுதிப்புயல் என்பது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், இந்த அளவிற்கு உயிரிழப்பு ஏற்படுவது அசாதாரணமானது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அல்வார், பரத்பூர் மற்றும் தொல்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு குறைந்தது 31 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அல்வார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 43 பேர் ஆக்ராவை சேர்ந்தவர்கள்.
"20 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இதுபோன்ற மோசமான புயலை நான் கண்டதில்லை" என்று ராஜஸ்தானில் பேரிடர் மேலாண்மை வாரிய செயலாளர் ஹேமன்த் கெரா பிபிசியிடம் தெரிவித்தார்.
வட இந்தியாவில் 125 பேரை காவு வாங்கிய புழுதிப்புயல் (காணொளி)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்