“அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்ய மரணத்தைத் தழுவவும் தயார்” - சீனப் போராளியின் மனைவி

நோபல் பரிசு பெற்றவராக அறிவிக்கப்பட்ட சீனரான லியு சியாவ்போவின் மனைவி சீன அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மரணத்தைத் தழுவவும் தயாராக இருப்பதாக ஜெர்மனியிலுள்ள தனது நண்பரிடம் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய கணவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2010ம் ஆண்டிலிருந்து 57 வயதான லியு சியா, வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார். அவர் மீது எந்தவித குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

சீனாவின் ஜனநாயக ஆதரவு பரப்புரையாளர்களில் ஒருவராகவும், சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவராகவும் லியு சியாவ்போ விளங்கினார்.

ஆட்சிக் கவிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் கடந்த ஆண்டு லியு சியாவ்போ இறந்தார்.

கணவருடைய இறப்புக்கு பின்னர், லியு சியா பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன.

கடும் காண்காணிப்பின் கீழ் பல ஆண்டுகளை கழித்துள்ள பெண் கவிஞரான லியு சியா, மன அழுத்ததத்தால் துன்புறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் யாரையும் தொடர்பு கொள்ளாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய நண்பர்களும், வழக்கறிஞரும் தெரிவிக்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் அவரை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

லியு சியாவை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்வலர் குழுக்கள் சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

ஆனால், அவர் சுதந்திரமான குடிமகள் என்றும், கணவரின் இறப்பால் ஏற்பட்டுள்ள கவலையால் பிறரோடு தொடர்பு கொள்ளாமல் அவர் இருந்து வருகிறார் என்றும் சீன அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் லியு சியாவோடு பேசியுள்ள அவருடைய நண்பர் லியாவ் யிவு, "வாழ்வதைவிட இறப்பது எனக்கு எளிதானது. இறப்பை பயன்படுத்தி தப்பித்து கொள்வதைவிட எளிதானது எதுவும் எனக்கு இருக்க முடியாது" என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

'சைனாசேஞ்ச்' என்ற இணையதளத்தில் இது பற்றி எழுதியுள்ள லியாவ், ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

"அச்சப்படுவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. என்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால், எனது வீட்டிலேயே சாவேன். சியாவ்போ மறைந்துவிட்டார். இப்போது இவ்வுலகில் எனக்கென்று எதுவுமில்லை" என்று லியு சியா பேசியதாக லியாவ் யிவு கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: