You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்று நோய்: சீன மனித உரிமை ஆர்வலர் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீனரான லியு சியாவ்போவுக்கு மரணத்திற்கு இட்டுசெல்லும் நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்த பிறகு அவரை சீனா சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றியுள்ளது.
மேலதிக ஜனநாயகம் வேண்டும் என்று கோரியதற்காக ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டில் மனித உரிமை பரப்புரையாளரான லியு சியாவ்போ 2009 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்னால் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், லியோநிங் மாநிலத்தின் வட பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் லியு சியோவ்போ சிகிச்சை பெற்று வருவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு லியு சியாவ்போ நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது முதல், அவருடைய மனைவியான லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
61 வயதாகும் லியு சியாவ்போ, 1989 ஆம் ஆண்டு தியன்ஆன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு முக்கியமானதொரு தலைவராக இருந்தார்.
இவருடைய மனைவி சுதந்திரமாக செயல்பட போட்டிருக்கும் கட்டுப்பாடுகளுக்கான காரணம் பற்றி சீன அதிகாரிகள் ஒருபோதும் விளக்கம் அளிக்கவில்லை.
நோபல் பரிசு பெற்ற லியு சியாவ்போ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய சகோதரர் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி உறுதி செய்தார் என்று வழக்கறிஞர் மோ ஷியாவ்பிங் "சௌத் சைனா மார்னிங் போஸ்ட்" செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நோய் கண்டறியப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள ஷெங்யாங் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"அவருக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. அவருடைய நோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்" என்று மோ ஷியாவ்பிங் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு தியன்ஆன்மென் போராட்டம் ஒடுக்கப்பட்டதை தொடர்ந்து, லியு சியாவ்போவுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயக சீர்திருத்தங்களை பரப்புரை செய்ய சீனாவிலேயே தங்கியிருக்க முடிவு செய்தார் லியு சியாவ்போ.
சீனாவில் நடைபெறும் மனித உரிமைகளுக்கான போராட்டத்திற்கு "முதன்மையான அடையாளம்" இவர் என்று நோபல் பரிசு தேர்வு குழு அவரை பற்றி குறிப்பிட்டிருந்தது.
நோபல் பரிசு பெற அவரை சீனா அனுமதிக்கவில்லை. பரிசளிப்பின்போது அவர் அமர்வதற்கு போடப்பட்டிருந்த இருக்கையே அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காலியாக இருந்தது. லியு சியாவ்போ நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரை குற்றவாளியாக நடத்துகின்ற சீன அரசுக்கு ஆத்திரமூட்டியது.
அதனால், நார்வேயுடனான சீனாவின் ராஜீய உறவுகள் முடக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் இந்த உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
சீனாவில் பல கட்சி ஜனநாயகத்தை அனுமதிக்கவும், மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கவும் அழைப்பு விடுத்த "சார்ட்டர் 08" கொள்கை அறிக்கையை தொகுத்த பிறகு, "ஆட்சிக்கவிழ்ப்பை" தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் லியு சியாவ் போவுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்ய இன்னும் 3 ஆண்டுகளே உள்ளன.
"அவரை சிறையில் அடைத்திருக்கவே கூடாது" என்று "அம்னெஸ்டி இன்டர்நேஷனல்" அமைப்பு கூறியிருக்கிறது.
லியு சியாவ்போவுக்கு போதுமான மருத்துவ பராமரிப்பு அளிக்கவும், அவருடைய உறவினரை எளிதாக சந்திக்க ஆவன செய்யவும் வேண்டுமென சீன அரசை வலியுறுத்தியுள்ள இந்த அமைப்பு, இவரும், மனித உரிமைக்காக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட எல்லோரையும் உடனடியாகவும், எவ்வித நிபந்தனைகள் இன்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்